Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகளவு ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கு பக்கவாதம் பாதிக்கும் அபாயம் அதிகம்தான்.
ஸ்ட்ரெஸ் இருக்கும்போது நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அதீத ஸ்ட்ரெஸ்ஸில் உள்ள நபரின் மூளை அமைதியாக வேலை செய்யாது. சரியாகத் தூங்க மாட்டார். அதனால் அவரது மூளைக்கு ஓய்வு கிடைத்திருக்காது. அவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கார்ட்டிசால் ஹார்மோன் அளவு உடலில் அதிகரிக்கும். ரத்தச் சர்க்கரை அளவும் உயரும். கூடவே கொலஸ்ட்ரால் அளவும் கூடும்.
ஸ்ட்ரெஸ் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அந்த நபர் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ செய்வார். இந்த இரண்டும் இன்னும் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது பக்கவாத பாதிப்புக்கான ரிஸ்க்கை இன்னும் அதிகரிக்கும்.
கடந்த வருடம் இது குறித்து ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. வேலையிடத்தில் பலருக்கும் டெட்லைனை முடிக்க வேண்டிய கட்டாயமும், டாஸ்க்குகளை முடிக்க வேண்டிய கட்டாயமும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணமாகின்றன. அடுத்ததாக, செய்கிற வேலையில் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கட்டுப்பாடு இருக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
டெட்லைன் நெருக்கடிகள் இல்லாத துறைகளில் வேலை பார்த்தவர்களிடம் பக்கவாத பாதிப்பு குறைவாக இருந்தது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெஸ்டாரன்ட்டுகளில் வெயிட்டர்களாக பணிபுரிவோருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படும் ரிஸ்க் அதிகம் என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.
மற்ற எந்த வேலையைவிடவும் இவர்களுக்கு ஓய்வில்லாத பணி சுழற்சி, வாடிக்கையாளர்களின் அணுகுமுறை, அவர்களுக்கான சேவையில் காட்ட வேண்டிய அவசரம் காரணமாக உச்சகட்ட ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறதாம். அதே போல செவிலியர் பணியிலும் இந்த ரிஸ்க் அதிகமாம்.
எனவே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் பக்கவாதத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்ட்ரெஸ் என்பதை உங்களுக்கான எக்ஸ்கியூஸாக சொல்லிக் கொள்ளாதீர்கள். நம் வேலை நமக்கு ஸ்ட்ரெஸ்ஸை தருகிறது என்றால் நாம்தான் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். வேலையை மாற்றிக்கொள்ள முடியாத சூழலில் அந்த வேலையை இலகுவாக, மகிழ்ச்சியாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
எனவே உங்களுடைய ஸ்ட்ரெஸ் அளவை நீங்கள்தான் உணர்ந்து அதிலிருந்து விடுபட முயல வேண்டும். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் இருந்து உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment