SRH vs RCB: தலைவன் ஒருவன் பெரும் `ரன் சேஸ்' கலைஞன்; விராட் கோலி சதத்தால் பிளேஆப் ரேசில் தொடரும் RCB!
இந்த ஐபிஎல் சீசனில் இன்னும் 6 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் 7 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கான போட்டியில் இன்னும் பலப்பரீட்சையில் உள்ளன. இத்தகைய விறுவிறுப்பான சூழ்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் 65-ம் போட்டியில் RCB மற்றும் SRH அணிகள் மோதிக்கொண்டன.
எஞ்சிய 2 போட்டிகளில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் RCBயும், இதுவரை ஹோம் கிரவுண்டில் விளையாடிய 6 போட்டியில் ஒரே ஒரு வெற்றி என்ற மோசமான சாதனையைத் தொடரவிடக் கூடாது என்ற மானமீட்பு போராட்டத்தில் SRH-ம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் ஜெயித்த RCB பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
இந்த சீசனில் பவர்பிளேயில் 9 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சிராஜ், முதல் ஓவரை வீச, அபிஷேக் ஷர்மா மற்றும் ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து அட்டகாசமான தொடக்கத்தைத் தந்தார் சிராஜ். RR-க்கு எதிரான முந்தைய போட்டியில் 3-10 என ராஜபாட்டையைக் கிளப்பிய பார்னலின் 2வது ஓவரை 'ராஜபாட்டை' திரைப்படமென நினைத்து 2 ஃபோர், 1 சிக்ஸர் என அடித்து துவம்சம் செய்தது திரிபாதி - அபிஷேக் ஜோடி.
இதற்கிடையில் பவர்பிளேவுக்குள் ஸ்பின் அட்டாக்கை பிரேஸ்வெல்லை வைத்துத் தொடங்கினார் டூ பிளெஸ்ஸி. அந்தத் திட்டம் வேலை செய்ய, இரண்டு விக்கெட்களை வீழ்த்தித் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டவைத்தார் பிரேஸ்வெல். 5 ஓவர் முடிவில் 33-2 என்று சொதப்பலான தொடக்கத்தால் தடுமாறியது SRH.
இக்கட்டான சூழ்நிலையில் கேப்டன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்தார் கிளாசன். எடுத்த எடுப்பிலே டாப் கியரில் கிளாஸான 4 பவுண்டரிகளை அடித்தார் கிளாசன். மாலை வேளையில் சூரியன் உதிப்பது போல இதுநாள் வரை 3வது அல்லது 4வது விக்கெட் விழுந்த பிறகு கடைசி நேரத்தில் இறக்கி வந்த கிளாசனை இன்று முன்னரே இறக்கி நல்ல முடிவை எடுத்தது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.
அந்த முடிவைச் சரி என நிரூபிக்கும் வகையில் `கிளாசன்தான் வராரு விடியல் தரப் போறாரு' என 24 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் கிளாசன். மறுமுனையில் பொறுமையாகத் தட்டிக் கொடுத்து ஆடிக்கொண்டிருந்த மார்க்ரம் ரிவர்ஸ் ஸ்வீப் என அடித்து ஆட முயற்சி செய்து ஷபாஸ் அகமது பந்தில் போல்டு ஆனார். 76 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த இந்த ஜோடி பிரிக்கப்பட்டது.
இருந்தும் ப்ரூக்குடன் இணைந்த கிளாசன் ரன் வேட்டையைத் தொடர்ந்தார். குறிப்பாக ஸ்பின்னர்களைக் குறி வைத்து இருவரும் வாணவேடிக்கைகளை நிகழ்த்தினர். ஹர்சல் படேல் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் சிக்ஸர் விளாசி 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்தார் கிளாசன்.
எதிர்புறம் கே (Kohli), ஜி Glen Maxwell, எஃப் (Faf Duplessis)-யே இருந்தாலும் 'நானே ராக்கி பாய்' எனக் கர்ஜித்துச் சொல்லும் படி இருந்தது அவர் கொண்டாட்டம். 8 ஃபோர், 6 சிக்ஸர் என அற்புதமான அவரது ஆட்டம் அதே ஓவரில் பவுல்டு ஆகி முடிவுக்கு வந்தது. 20வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது SRH.
இந்த சீசனில் வெற்றிகரமாக 700 ரன்களைச் சேர்த்த ஜோடி எனும் பெருமையுடன் கோலி மற்றும் டூ ப்ளெஸ்ஸி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தனர். முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி அருமையான தொடக்கத்தைத் தந்தார் கோலி.
எப்படியாவது பவர் பிளே முடிவதற்குள் இவர்களைப் பிரித்துவிட வேண்டும் என இரண்டாவது ஓவரே இடதுகை ஸ்பின்னரைப் பயன்படுத்தினார் மார்க்ரம். ஆனால் மாஸ்டர் கிளாஸ்ஸான இரண்டு ஃபோர்களை அதே ஓவரில் அறைந்தார் கோலி.
அடுத்த ஓவரில் இதே வேகத்தில் நடராஜன் வீசிய பந்தை ஓங்கி அடிக்க பார்த்த கோலி டைமிங்கை மிஸ் செய்ய இன்சைட் எட்ஜ் ஆகி பந்து ஸ்டம்பைப் பதம் பார்ப்பதிலிருந்து நூலிழையில் தப்பியது. இதனையடுத்து ஹாட் ட்ரிக் ஃபோர்களை அடித்து பார்ட்னர்ஷிப் பார்ட்டியில் இணைந்து கொண்டார் டூ பிளெஸ்ஸி. 8 ரன்களில் டீப் ஸ்கோயர் திசையில் இவர் தந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் பிலிப். இதனைப் பயன்படுத்தி இருவரும் சேர்ந்து தங்களது 7வது அரை சதத்தைப் பூர்த்தி செய்து பவர்பிளே முடிவில் 64-0 என வலுவான நிலையில் RCB அணியைக் கொண்டு சென்றனர்.
ஆட்டத்தின் 9வது ஓவரில் ஒரு பவுன்சர் பந்தில் கேட்ச் ஆனார் டூ பிளெஸ்ஸி. ஆனால் அது நோ பாலாக அறிவிக்கப்பட, இரண்டாவது முறையாக உயிர்த்தெழுந்தார். 12 ஓவர் முடிவில் 100 ரன்களைக் கடந்த இந்த ஜோடி தங்களது நான்காவது சதத்தைப் பதிவு செய்தது. தொடர்ந்து கோலி மீது மோசமான ஸ்ட்ரைக் ரேட் என்ற குற்றச்சாட்டும், டி20 போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற வேண்டும் என்கிற விவாதமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கான முற்றுப்புள்ளியை 103 மீட்டர் இமாலய சிக்ஸர் அடித்து முடித்து வைத்திருக்கிறார் விராட். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் புவனேஸ்வரர் வீசிய 15-ம் ஓவரில் நான்கு பவுண்டரிகளைச் சாத்தினார் விராட் கோலி. இதனால் 150-0 என வெற்றியை நோக்கி வீறு நடை போட்டது RCB.
17வது ஓவரில் நடராஜன் வீசிய பந்தில் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்த கோலி தனது 90 ரன்களை நெருங்கினார். அடுத்து அவர் அடித்த ஒவ்வொரு ரன்களுக்கும் ரசிகர்கள் வெறித்தனமாக ஆர்ப்பரிக்க மைதானமே அதிர்ந்தது. போட்டி நடப்பது ஹைதராபாத் என்றாலும் ஆடுகளம் கோலியின் வசம் ஆனது.
4 வருடங்களாக ஐ.பி.எல் சதமில்லை. சென்ற வருடம் மோசமான பார்மில் அவுட் ஆகி வெளியேறும் போது வான் நோக்கி இரு கைகளை உயர்த்தி புலம்பிக்கொண்டே சென்றிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக டீப் மிட்விக்கெட் திசையில், "விழுந்தால் இடியாய் எழுந்தால் மலையாய்" என சிக்ஸர் அடித்து "தலைவன் ஒருவன், பெரும் 'ரன் சேஸ்' கலைஞன்" என 62 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து புலம்பிய அதே கைகளை வான் நோக்கி உயர்த்திக் கொண்டாடினார் விராட் கோலி. இந்த சதத்தின் மூலம் கிறிஸ் கெயிலின் 6 ஐபிஎல் சதங்கள் எனும் சாதனையைச் சமன் செய்தார்.
கோலி அடுத்த பந்தில் கேட்ச் ஆக டூ பிளெஸ்ஸியும் 47 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து நடராஜன் பந்தில் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு ஃபோர் அடித்து எந்த பதற்றமும் இல்லாமல் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலைக்கு அணியைக் கொண்டு சென்றார்.
முடிவில் 19.2 ஓவரில் RCB வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் தகுதிக்கான ஓட்டத்தில் ஒரு அடி முன்னே வைத்துள்ளது RCB. அதுமட்டுமில்லாமல் எதிர் எதிர் அணி வீரர்கள் சதம் அடித்த முதல் ஐபிஎல் போட்டி எனும் சாதனையையும் இப்போட்டி செய்திருக்கிறது.
Comments
Post a Comment