` `நான் ஒரு சிறந்த மனிதன்’ என்று என்னை நான் நினைத்ததேயில்லை.’ - ரவீந்திர ஜடேஜா
`ஜட்டு’, `ராக்ஸ்டார்’, `சர் ஜடேஜா’... எத்தனையோ செல்லப் பெயர்கள் ரவீந்திர ஜடேஜாவுக்கு. இவற்றில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மனமுவந்து பாராட்டி வைத்த பெயர்தான் `ராக்ஸ்டார்.’ அந்தப் பட்டத்துக்கான முழுத்தகுதியும் உடையவர் ஜடேஜா. இந்தப் புகழும் பெருமையும் அத்தனை எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. அவர் கடந்து வந்தது சாதாரணப் பாதை அல்ல... பாதங்களைப் பதம் பார்க்கும் முட்கள் நிறைந்த கருவேலங்காடு. ஒரு சராசரி மனிதனாக இழப்புகள், அவமானங்கள், பிரச்னைகள் என அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். போராடிப் போராடித்தான் தன்னை கிரிக்கெட்டில் நிலைநிறுத்திக்கொண்டார் ஜடேஜா.
குஜராத்திலுள்ள, ஜாம்நகர் மாவட்டத்திலிருக்கும் நவாகம் கெட் (Navagam Ghed) என்ற ஊரில், 1988, டிசம்பர் 6-ம் தேதி பிறந்தவர் ஜடேஜா. பெயர்தான் `குஜராத்தி ராஜ்புத்’ குடும்பம். ஆனால், குடும்பம் மொத்தமும் அம்மா லதாபென் கொண்டு வரும் சம்பளத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. லதா, நர்ஸாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்பா அனிருத் (Anirudhsinh), கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தார். அவற்றில் ஒன்று, ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில் வாட்ச்மேன் வேலை. அதனால் நிரந்தர வருமானமும் இல்லை. ஜடேஜாவுக்கு இரண்டு சகோதரிகள். வீட்டின் வறுமை சதா இம்சித்துக்கொண்டிருந்தது. அதை மறப்பதற்காகவே பெரும்பாலும் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தார் ரவீந்திர ஜடேஜா. அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் அம்மா லதாபென்னுக்கு ஒரு சின்னஞ்சிறு அறையைக் கொடுத்திருந்தது, மருத்துவமனை நிர்வாகம். அந்த அறையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தார் ஜடேஜா.
அம்மாவுக்கு அருகிலேயே படுத்திருப்பார். அம்மா, இதமாகத் தட்டிக்கொடுத்து அவரைத் தூங்கவைப்பார். சில நேரங்களில் ஜடேஜா தூக்கத்தில் உளறுவது உண்டு. ஒருநாள் இரவு, அம்மா ஜடேஜாவின் அக்கா நைனாவைத் (Naina) தட்டி எழுப்பினார். ``உன் தம்பி தூக்கத்துல என்னென்னவோ சொல்றான். எனக்கு ஒண்ணும் புரியலை. என்னான்னு கேட்டு சொல்லு’’ என்றார். அக்கா வந்தார். ஜடேஜா சொல்வதைக் கேட்டார். ``அது ஒண்ணும் இல்லம்மா... `டேய்... அந்தப் பந்தைப் பிடிடா... பிடிடா... அங்கே நிக்காதேன்னு சொன்னேன்ல... இங்க வந்து நில்லு’ன்னு சொல்றான்மா’’ என்றார்.
``விளையாட்டைக் கனவு காணுறானா... என்ன விளையாட்டு?’’
``கிரிக்கெட்டும்மா.’’
``அது என்னன்னு கொஞ்சம் பாரேன்.’’
``சரிம்மா.’’
`எப்போதெல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் என் தகுதியை நிரூபிக்க நான் முயல்கிறேன்.’ - ரவீந்திர ஜடேஜா
அடுத்த நாள் அக்கா நைனா, ஜடேஜா போகும் இடத்துக்கு அவர் அறியாமல் பின்னாலேயே போனார். அது ஒரு பொட்டல்வெளி. பல சிறுவர்கள் அங்கே கிரிக்கெட் விளையாடுவதற்காகக் கூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஜடேஜாவைப் பார்த்ததும் அருகில் வந்தான். ``என்ன ஒரு ரூபா கொண்டு வந்துருக்கியா?’’
`இல்லை’ என்பதுபோல உதட்டைப் பிதுக்கினார் ஜடேஜா. அங்கே விளையாட வரும் சிறுவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொண்டு வர வேண்டும் என்பது விதி. ஜடேஜா இருக்கும் சூழலில் அவரால் அந்த ஒரு ரூபாயைக் கொண்டு வர இயலவில்லை. ஆனால் கிரிக்கெட் ஆசையும் விடவில்லை. மற்ற சிறுவர்கள் ஜடேஜாவின் கைக்கு பேட் போகாமல் பார்த்துக்கொண்டார்கள். ஓடிச் சென்று பந்தை எடுக்க, போட பயன்படுத்திக்கொண்டார்கள். அவருக்கு பேட் பிடிக்கும் வாய்ப்பு வந்தபோது, ஒருவன் சத்தமாகக் கத்தினான்... ``சரி... சரி... ஆட்டம் முடிஞ்சுபோச்சு. எல்லாரும் கிளம்புங்க.’’ இதைப் பார்த்து மனம் வெதும்பிப்போனார் அக்கா.
அடுத்த நாளிலிருந்து அம்மாவும் அக்காவும், ஜடேஜாவை ஊக்கப்படுத்த ஆரம்பித்தார்கள். அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு விபத்தில் அம்மா லதா இறந்துபோனார். அப்போது ஜடேஜாவுக்கு வயது வெறும் 17 வயது.
`என் வழியில் எந்த வாய்ப்பு வந்தாலும், என்னால் அதை வீணடிக்க முடியாது.’ - ரவீந்திர ஜடேஜா.
'`கபில்தேவுக்குப் பிறகு இந்திய அணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதான்’ என விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர் ஜடேஜா. சின்ன வயதிலேயே கிரிக்கெட்டில் வெறித்தனமான ஈடுபாடு. நடுத்தரக் குடும்பச் சூழ்நிலை அவருடைய கிரிக்கெட் கனவுக்குத் தடைபோட்டாலும், அம்மாவும் சகோதரிகளும் அவரை கிரிக்கெட் விளையாடச் சொல்லி ஊக்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால், அப்பாவுக்கு ஜடேஜா கிரிக்கெட் விளையாடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவருக்கு `இவன் ராணுவத்தில் பெரிய அதிகாரியாக வந்தால் நல்லா இருப்பானே...’ என்பது ஆசை. அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பார். அம்மாவின் மரணம் ஜடேஜாவுக்கு விழுந்த மிகப்பெரிய அடி. `இனி கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்டுவிட வேண்டியதுதானோ...’ என நினைத்துக்கொண்டிருந்தபோது, அவருடைய சகோதரி நைனாவுக்கு (Naina) நர்ஸ் வேலை கிடைத்தது. கொஞ்சம் ஆசுவாசமானார் ஜடேஜா.
கிரிக்கெட் எளிய மனிதர்களுக்கான விளையாட்டு அல்ல. அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். முக்கியமாக உயர் ரக பேட், பால், கையுறை, ஸ்டம்ப் எல்லாம் அடங்கிய கிரிக்கெட் கிட் வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு இரண்டாக கிட் கைவசம் இருக்கவேண்டியது அவசியம். பால்களுக்கும் பேட்டுகளுக்கும் கணக்கே இல்லை.
திறமையோடு அதிர்ஷ்டமும் இருந்தால்தான் மாநில அளவிலாவது கிரிக்கெட் அணியில் இடம்பெற முடியும். கூடவே நல்ல கோச் அமைய வேண்டும். அந்த ராஜ விளையாட்டை ஜடேஜா தேர்ந்தெடுத்ததுதான் விதி. இளம் வயதில் ஏதோ ஒரு தப்பித்தலுக்காக கிரிக்கெட்டைக் கையிலெடுத்திருந்தார் ஜடேஜா. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் பிடித்துப்போக, அதிலேயே மூழ்கத் தொடங்கினார். ஆனால், மேலும் மேலும் வளர வேண்டுமே... ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டுமே..! கை தூக்கிவிடவும் ஓர் ஆள் வந்தார், அவர் பெயர் மகேந்திரசிங் சௌஹான் (Mahendrasinh Chauhan).
மகேந்திரசிங் சௌஹான் ரொம்பக் கறாரான பேர்வழி. அவர் குஜராத்திலிருந்த ஜாம்நகர், கிரிக்கெட் பங்களாவில் (Cricket Bungalow) கோச்சாக இருந்தார். அது, அரசு உதவியுடன் கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் ஒரு மையம். அங்கே போய்ச் சேர்ந்தார் ஜடேஜா. சௌஹானின் கண்டிப்பு பயங்கரமானது. அவர் பயிற்சி கொடுக்கும் மாணவர்களை அடிப்பார், உதைப்பார்... யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால்தான் அங்கு சேருவதற்கு இடமே கிடைக்கும். ஒரு பத்திரிகைப் பேட்டியில், `என்னிடம் அதிகம் அடி வாங்கிய மாணவர்களில் முதல் இடம் ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சௌஹான். அந்த அடிகள், கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு உரமாக விழுந்தன என்பதுதான் உண்மை. பின்னாளில் ஒரு பேட்டியில், ``எனக்கு இரண்டு மகேந்திரசிங் வழிகாட்டினார்கள்... ஒருவர், மகேந்திரசிங் சௌஹான். இன்னொருவர், மகேந்திரசிங் தோனி’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜடேஜா.
`நான் யாருக்கும், எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை.’ - ரவீந்திர ஜடேஜா.
2005-ம் ஆண்டு, 16 வயதில் பொதுவெளியில் ஜடேஜாவின் கிரிக்கெட் ஆட்டம் வெளியானது. 19 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் (Under-19 Cricket World Cup) போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. அவரின் வாழ்க்கை விரிவாக விவரிக்கப்படவேண்டியது. தோல்விகளும், ஏளனங்களும், கேலிகளும் நிறைந்த துயர சரித்திரம் அது. ஆனால், ஒரு விளையாட்டைச் `சிக்’கென்று பற்றிக்கொண்டு, அதில் நம்பிக்கைக்குரிய ஒரு நட்சத்திர வீரராக ஜொலிப்பது சாதாரண விஷயமல்ல. சாதித்துக் காட்டியிருக்கிறார் ஜடேஜா. அதற்கு ஊக்கம் கொடுத்தவர்கள், அவருடைய அம்மாவும் சகோதரிகளும்தான்.
ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டார் ஜடேஜா... ``என்னுடைய அம்மாவுக்கு நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்பது ஆசை. ஆனால், நான் உலக அளவில் கிரிக்கெட் விளையாடியபோது, அதைப் பார்ப்பதற்குக்கூட அவர் இல்லை.’’
Comments
Post a Comment