நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா,
"சென்ற வருடம் அவரின் ஆட்டத்தைப் பார்த்தேன். இந்த வருடம் அது இன்னும் மேம்பட்டிருக்கிறது. உனக்கு எப்படி இந்த பவர் வந்தது எனக் கேட்டேன். அவர் ஜிம்முக்கு செல்வதாகக் கூறினார். அது நல்லது, அவருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு என எல்லாருக்கும்தான்" என ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து தெரிவித்திருந்தார்.
ஐ.பி.எல்-இல் தன்னை நிரூபிக்கிற இளைஞன் அடுத்ததாக இந்திய அணியில் இடம்பெறுவான் என்கிற வகையில் அவர் பேசியிருப்பார். 1000 போட்டிகள் கண்ட ஐ.பி.எல் இன் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது இதுதான். வியாபாரம், பொழுதுபோக்கு, அரசியல், விளம்பரம், ஊழல், குற்றச்சாட்டுகள் என ஐ.பி.எல் குறித்த பல விமர்சனங்களுக்கு மத்தியில் திறமை வாய்ந்த பல இளைஞர்களை ஐ.பி.எல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது.
ஆட்டோக்காரரின் மகன், கேஸ் சிலிண்டர் சுமப்பவரின் மகன், வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லாதவர்கள் என எளிய குடும்பத்து இளைஞர்கள் ஐ.பி.எல்-இன் வழியே அடையாளப்பட்டிருக்கிறார்கள்.
கிரிக்கெட் என்கிற விளையாட்டு குறித்த ரசிகர்களின் பார்வை, கிரிக்கெட்டர்களின் பார்வை, டி20 பார்மேட்டின் பூதாகரமான வளர்ச்சி எனப் பலவற்றிலும் ஐ.பி.எல்-இன் ஆதிக்கம் இருக்கிறது.
ஐபிஎல்-இன் 1000வது போட்டி என்கிற அறிவிப்புடன் நேற்றைய போட்டி தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோதும் போட்டிதான் 1000வது போட்டி எனச் சிலரால் சொல்லப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வமாக நடந்த 1000வது போட்டியில் ஐ.பி.எல்-இன் முதல் கோப்பையை வென்ற ராஜஸ்தானும், அதிக முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸும் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணியின் கேப்டன்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாராவுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டிபெண்ட் செய்த போட்டிகளில் கிடைத்த வெற்றிகள் இந்த முறையும் கைகொடுக்கும் என சஞ்சு சாம்சன் இந்த முடிவை எடுத்திருக்கலாம். தடுமாறிக் கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆர்ச்சர் கம்பேக் கொடுத்திருந்தார். 3 மாற்றங்களுடன் களமிறங்கியது மும்பை. பந்து வீச்சாளர்களுக்கானதாக அல்லாமல் நேற்றைய ஆட்டமும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாகவே இருந்தது.
பவர்பிளேயில் தொடர்ந்து பவர்காட்டும் ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணியில் தொடக்கம் முதலே பட்லர் தடுமாறத் தொடங்கினார். டாட் பால்கள், டக்கிலேயே ஒரு விக்கெட் சான்ஸ் என தடுமாறிய பட்லர் 18 ரன்களில் பியூஷ் சாவ்லாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே தனது அதிரடியைக் காட்டினார். ஆர்ச்சர், க்ரீன், சாவ்லா என யாரின் பந்துவீச்சும் அவரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
'ஒரு நல்ல ஷாட் அடிப்பேன், அடுத்தே அவுட் ஆவேன் அதாம்லே வர்கீஸு' என சஞ்சு சாம்சன் நடையைக்கட்ட, 'நான் ஒரு இன்டர்னேஷல் பிளேயர் ஆனா அது எனக்கே தெரியாது!' என்பதுபோல ஹோல்டர் இந்த முறையும் சோபிக்கத் தவறினார். ஹெட்மயர், ஜுரேல் இருவருமே பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தாமல் வெளியேறினர்.
இறுதி வரை அசராமல் நின்று ஆடிய ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் 212 ரன்கள் என்ற நல்ல இலக்கை அடைந்தது. ஐ.பி.எல் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து ஆரஞ்சு கேப்பையும் கைப்பற்றினார். இந்த ஐ.பி.எல் சீசனில் தனி ஒரு நபர் அடித்த அதிகபட்ச ரன்கள் ஜெய்ஸ்வால் அடித்ததுதான்.
எந்தவித பாட்னர்ஷிப்பும் அமையாத நிலையில் சளைக்காமல் விளையாடினார். ரன் ரேட் குறையாமல் ஓவருக்கு ஒரு பிக் ஷாட் ஆடினார். ஸ்ரைட் டிரைவ், ஸ்கொயர் லெக், பேக் ஸ்வீப் என அனுபவமிக்க பந்து வீச்சாளர்களை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொண்டார். கடந்த போட்டியில் 77 ரன்கள் அடித்தபோது சதம் அடிக்க ஆசைப்படவில்லையா எனக் கேட்டதற்கு, இல்லை அணியின் ரன்கள் குறித்தே எனது கவனம் இருந்தது என்றார். இந்தப் போட்டியில் சதமும் அடித்து அணியின் இலக்கையும் அதிகப்படுத்தினார். 14வது ஓவரை துல்லியமாக வீசி ஒரு விக்கெட், 5 டாட் பால் மட்டுமே கொடுத்த கம்பேக் ஆர்ச்சர் தொடக்கத்தில் எக்ஸ்ட்ராஸை வாரி வழங்கினார். மொத்தமாக 25 எக்ஸ்ட்ராஸை வழங்கியிருந்தது மும்பை.
213 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐ.பி.எல்-க்கு 1000, எனக்கு 36 என தனது பிறந்தநாளில் களமிறங்கிய ஹிட் மேன் `அங்க எப்படி சாம்சனோ இங்க அந்த மாதிரி நான்... அதுக்கும் மேல!' என்பதாக சந்திப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே போல்டானார். அதன் பிறகு இஷான் கிஷன் - க்ரீன் ஜோடி ரன்களைச் சேர்க்கத் தொடங்கியது.
இஷான் கிஷன் அவுட் ஆன பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் தனது பழைய ஆட்டத்தை ஆடினார். க்ரீன் 44 ரன்களில் வெளியேற, அரைசதத்தைக் கடந்த சூர்யகுமார் யாதவ், ஷார்ட் பைன் லெக்கில் சந்தீப் சர்மாவின் அபாரமான கேட்ச்சால் வெளியேறினார். 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி யார் பக்கம் என்ற யோசனையை டிம் டேவிட் தன் பக்கம் நோக்கி நகர்த்தினார்.
ஐ.பி.எல்லில் எல்லா இலக்குகளும் சாத்தியம் என்கிற நிலையில் வெறும் 14 பந்துகளில் 45 ரன்கள் அடித்து டிம் டேவிட் இந்த முறை நாயகனாகியிருக்கிறார்.
போல்ட், சந்தீப் சர்மா எனப் பலரும் கட்டுப்படுத்த முயன்றும் டிம் டேவிட்டின் அதிரடியைத் தடுக்கமுடியவில்லை. கடைசி ஓவரை ஹோல்டர் வீச, முதல் மூன்று பந்துகளுமே புல் டாஸாக, டிம் டேவிட் 3 சிக்ஸர்களில் மும்பை இந்தியன்ஸுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார். அஸ்வின், சந்தீப் சர்மா தவிர அனைவரின் பந்து வீச்சும் பெரிதாக எடுபடாத காரணத்தால் ஜெய்வாலின் சதம், 200-க்கு மேலான இலக்கு என அனைத்தும் வீணாகிப் போயின. இம்பாக்ட் பிளேயராகக் களமிறங்கிய சென்ற சீசனின் `மேட்ச் வின்னிங்' ஸ்பெல் வீசிய குல்தீப் சென் ஒரே ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு பல நாள்கள் கழித்து ஒரு மிகப் பெரிய கொண்டாட்டமாக இந்த வெற்றி அமைந்தது. அணி வீரர்களின் திறமையைத் தாண்டி போட்டியைத் தீர்மானிப்பதில் ஆடுகளமும் நேற்றைய ஆட்டத்தில் முக்கிய பங்கை வகித்தது. கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவை இந்த முறை களமிறக்காதது, சஹாலின் ஒரு ஓவர், ஹோல்டருக்கு கடைசி ஓவரைக் கொடுத்தது எனப் பல குழப்பங்களை ராஜஸ்தான் செய்திருக்கிறது.
`இந்தப் பசங்க நல்ல பசங்கதான்பா ஆனா ஏதோ ஒன்னு பிடிபடல!' என்பது போன்ற ஒரு நிலையை மீண்டும் ராஜஸ்தான் அடைந்திருக்கிறது. ராஜஸ்தானிடம் கேட்பதற்கு மூன்று கேள்விகளே தோன்றுகின்றன.
1. ஆட்டத்தில் வெற்றிபெறும்போது வெற்றியை அனுபவிப்பதோடு மட்டுமில்லாமல், செய்த தவறுகளையும் களைவது மிக அவசியம் ஆனால், அதைச் செய்கிறதா என்பது கேள்விக்குறியே!
2. போன சீசனில் பட்லர், இந்த சீசனில் ஜெய்ஸ்வால் என பவர் பிளேயில் விளையாடும் இருவரின் ஆட்டம் மட்டுமே அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக இருப்பது அணிக்குச் சரியானதல்ல.
3. தொடர்ச்சியாக சோபிக்கத் தவறும் ஹோல்டரை பேட்டிங்கிற்காகவா, பந்துவீச்சுக்காகவா, எதற்காக அனைத்து போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை `ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல்' செய்ய வேண்டிய நேரமிது.
ஒவ்வொரு அணியும் 10 போட்டிகளை நெருங்கியிருக்கும் நிலையில் இனிவரும் ஆட்டங்களில் தாங்கள் வெல்வதைவிட, எந்த அணி தோற்றால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கால்குலேட்டருடன் ஆராய்கிற நிலை வந்துவிட்டதால் இனி சுவாரஸ்யத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.
Comments
Post a Comment