இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும்கூட மாத விலக்கு என்பது முற்றிலும் ``பொம்பிளைங்க சமாச்சாரமாக”வே நீடிக்கிறது. பாலியல் கல்வியின் பகுதியாக நம் குழந்தைகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இந்த இயற்கை நிகழ்வு பற்றிய தெளிவு, பாலியல் கல்வியை ஏற்காத நம் கல்விமுறையால் முடக்கப்பட்டுவிட்டது. புற வாழ்க்கையை மிக நவீனமாக வடிவமைத்துக் கொண்டுள்ள நம் சமூகம், உள்ளுக்குள் மிகவும் பழைய சிந்தனைகளால் புரையோடிப்போய் இருக்கிறது.
மாதவிலக்கு குறித்த எண்ணற்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றை நம் சமூகம் வாசிக்கவில்லை. பொதுவாகவே நம் சமூகம் புத்தக வாசிப்பில் ஆகக்கடைநிலையில் நிற்கும் சமூகம்தான். அதிலும் மாதவிடாய் பற்றி எங்கே வாசிக்கும்? ஆகவே ஆண்களுக்குத் திருமணமான பிறகுதான், மனைவி வழியாக மாதவிலக்கு பற்றிய சிறு அறிமுகம் கிடைக்கிறது. தமிழ்ச் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வரும் எனக்கு ஆண் சிறுகதை எழுத்தாளர்களில் யாரேனும் மாதவிலக்கு பற்றி எழுதியிருக்கிறார்களா என்று துருவிப் பார்க்கும் ஆவல் எழுந்து பார்த்தபோது, இரண்டே இரண்டு கதைகள் கிடைத்தன.
பிரபஞ்சன் எழுதிய `3 நாட்கள்' என்கிற அற்புதமான கதை ஒன்று...
``மாதம்தோறும் விலக்கு ஏற்படும் 3 நாள்களும், சுமதி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பது மாமியாரின் கட்டளை. அவ்வளவு ஆச்சாரமும் மடியுமாக வாழ்பவர் மாமியார். மட்டும ன்றி வீடும் சின்னது. மாதவிலக்கு நாள்களில் அவளைத் தூரமாக உட்கார வைக்கத் தனி அறையோ பின்பக்கத் தோட்டமோ ஏதும் இல்லாத சிறு வீடு. ஆகவே மாதாமாதம் சுமதி ரயிலேறி அம்மா வீட்டுக்குப் போகிறாள். குளித்துவிட்ட நான்காம் நாள் கிளம்பி, மீண்டும் கணவன் வீடு. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை. குளிச்சிட்டுத்தான் இருக்கிறாள் என்பதை, மாதாமாதம் அண்டை வீட்டாருக்கெல்லாம் அறிவிப்பதாக இருக்கின்றன அவளது மாதாந்தரப் பயணங்கள். அதில் அவள் மிகவும் கூசிப்போகிறாள். படுக்கையில் கணவனிடம் முறையிடுகிறாள்:
"இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியற விஷயமா? என் ரகசியத்துல உங்களுக்குப் பங்கில்லையா.. எனக்கு அவமானம்னா அது உங்களுக்கும் இல்லையா... மாசாமாசம் அதை நினைச்சாலே பகீர்னு வருதுங்க. அவமானத்தால செத்துக்கிட்டு இருக்கேன். நீங்களாவது மாமிக்கு இதை எடுத்துச்சொல்லக்கூடாதா?"
``….."
``ஏண்ணா…" இலேசான குறட்டை ஒலி அவனிடமிருந்து வெளிப்பட்டது. நிர்கதியாகிவிட்டது போல் இருந்தது அவளுக்கு.."
பெண்களின் உள்காயங்களுக்கு மருந்திடுவது இரண்டாவது பிரச்னை. அவர்கள் காயம்பட்டு நிற்பதை, அது என்னவென்றே கூட அறிந்து கொள்ளத் துப்பற்றவர்களாகக் குறட்டைவிடும் ஜீவராசிகளாக ஆண்கள் இருப்பதைச் சுளீர் எனக் கூறும் கதை இது.
இன்னொரு கதை ச. சுப்பாராவ் எழுதிய ``தாத்தாவின் டைரி"...
கணவனை இழந்தவளான தன் மருமகள் கற்போடு இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் விலக்காகும் தேதிகளை மாதம் தவறாமல் தன் டைரியில் குறித்து வைத்துக் கண்காணிக்கும் பெரியவரை பற்றிய கதை இது. நம் சமூகத்தில் ஆண்களுக்கு இதெல்லாம் தெரியாததால்தான் இலக்கியத்திலும் பெரிசாக ஒண்ணும் வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்கள் பெண்களுக்கிடையிலான உரையாடல்களே அரிதாக இருக்கும் நம் கட்டுப்பெட்டிச் சமூக வாழ்வில் பெண்களின் எந்தத் துயரம்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது? கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்ப்பது ஓரளவுக்கு ஆண்கள் மனங்களில் புரிந்துணர்வை ஏற்படும்.
கீதா இளங்கோவனின் மாதவிடாய் என்கிற ஆவணப்படம், திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் ஆண்கள் தங்கள் அறியாமை குறித்து வெட்கப்படுவதையும் குற்ற உணர்வு கொண்டு பேசுவதையும் ஒவ்வொரு திரையிடலின்போதும் பார்க்க முடிகிறது. இதுபோன்ற முயற்சிகளும் தொடர வேண்டும்.
- ச.தமிழ்ச்செல்வன்
Comments
Post a Comment