நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட வரிவிதிப்புக் கொள்கையை உருவாக்க, ஜிஎஸ்டி (GST) என்ற வரி முறை, 2017-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. GST விதிமுறைகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது வணிக நிறுவனத்திற்கு GSTIN எண் அவசியம். இது வணிகங்களுக்கு வரி விதிக்கப்படும் முறையை எளிதாக்குகிறது.
நீங்கள் வணிகம் அல்லது தனிநபராக இருந்தால், குறிப்பிட்ட வணிகத்திற்கு நீங்கள் ஜிஎஸ்டி எண் மற்றும் ஜிஎஸ்டியை தாக்கல் செய்வது கட்டாயமாகும். அப்படியான முக்கிய எண்ணை பெறுவது எப்படி என்பது பற்றி சென்னையை சேர்ந்த வரி ஆலோசகர் பொன்சிவசுப்பிரமணியன் விளக்குகிறார்...
GSTIN எண் பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்கள்
* வணிகம் அல்லது தனிநபரின் பான் கார்டு (ஜிஎஸ்டிஐஎன் எண் பான் கார்டு எண்ணின் அடிப்படையில் இருப்பதால் கட்டாயம்)
*ஆதார் அட்டை
* வணிகத்தின் பதிவு அல்லது ஒருங்கிணைப்புச் சான்றிதழ்
* வணிகம் அல்லது தனிநபருடன் தொடர்புடைய கணக்கிற்கான - வங்கி விவரங்கள்
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* வணிக முகவரிக்கான சான்று
* டிஜிட்டல் கையொப்பம்
பதிவு செய்வது எப்படி?
உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், https://www.gst.gov.in/ என்ற ஜிஎஸ்டியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை திறக்கவும். அதில் இருக்கும் ‘Services’ என்ற பகுதியை கிளிக் செய்து, அடுத்ததாக Registration என்ற பகுதியை சொடுக்கவும். அதனுள் New Registration-ஐ தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
New Registration -ல் அங்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, Register செய்ய உங்களுடைய பெயர், பான் எண், தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி, மாநிலம் மற்றும் உங்களுக்குப் பொருந்தும் நிறுவன வகை (வரி கழிப்பவர், செலுத்துபவர் அல்லது வரி வசூலிப்பவர், ஜிஎஸ்டி பயிற்சியாளர், குடியுரிமை பெறாதவர், வெளிநாட்டுத் தூதரகம் அல்லது தூதரகம் அல்லது குடியுரிமை பெறாத சேவை வழங்குநர்) போன்றவற்றை எல்லாம் நிரப்பவும்.
உங்களுடைய தகவல்களை நிரப்பிய பின் உங்களுடைய தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சலுக்கு, OTP அனுப்பப்படும். அனுப்பப்பட்ட சரியான OTP ஐ உள்ளீடு செய்யவும். அதைத் தொடர்ந்து, உங்கள் மொபைல் போன் மற்றும் மின்னஞ்சலில், தற்காலிக விண்ணப்ப குறிப்பு எண் (Temporary Registration Number) அனுப்பி வைக்கப்படும்.
அடுத்து, அந்த Temporary Registration Number-ஐ கொண்டு, உள்ளீட்டு விண்ணப்ப செயல்முறையின் பகுதி B-ஐ முடிக்க வேண்டும். இதை உள்ளீடு செய்தவுடன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அடுத்து விண்ணப்பத்தின் பகுதி B-ஐ Submit செய்யவேண்டும்.
சமர்ப்பித்த பிறகு, Aadhar authentication link உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும். அதனை சரிபார்த்து உள்ளிட்டபின், உங்களுடைய ஆதார் டேட்டாவும், பான் டேட்டாவும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
இதையடுத்து, உங்களுக்கு ARN எண் வைக்கப்படும். GST அதிகாரி உங்கள் விவரங்களை 3 வேலை நாள்களுக்குள் சரிபார்த்து, ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்வார். இல்லையெனில் 7 வேலை நாள்களுக்குள் GSTIN எண் வழங்கப்படும்.
அனைத்து விவரங்களும் ஆவணங்களும் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும், படிவம் GST-REG 05-ன் படி வழங்கப்பட்ட காரணங்களுக்காக அதிகாரத்தின்படி, விண்ணப்பத்தை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். கொடுக்கப்பட்ட ARN எண் கொண்டு உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment