Doctor Vikatan: ஒரு மாத்திரை சாப்பிட்டால் அது எத்தனை மணி நேரம் உடலுக்குள் வேலை செய்யும்.?
-கிடையூர் மாணிக்கம், பால்வாய் தெரு, சங்ககிரி, விகடன் இணையத்திலிருந்து...
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்
எந்தவிதமான மாத்திரையை எடுத்துக் கொண்டாலும் அது நான்குவிதமான புராசெஸுக்கு உள்ளாகும். முதலில் மருந்து உட்கிரகிக்கப்படுதல். உதாரணத்துக்கு இன்ஜெக்ஷன் போட்டால் மருந்தானது, நம் தசைகளில் இருந்தோ, சப்கியுட்டேனியஸ் லேயர் எனப்படும் சருமத்தின் அடுக்கு வழியோ உடலுக்குள் உறிஞ்சப்படும்.
அடுத்தது, அந்த மருந்து உடல் பாகங்களுக்கு அனுப்பப்படுவது. கொழுப்பு, தசை, ரத்தம், கல்லீரல் உள்பட உடலின் எல்லா பாகங்களிலும் அந்த மருந்து விநியோகிக்கப்படும்.
மூன்றாவது, மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம்.... அதாவது, அந்த மருந்து உடலில் எப்படி உடைபடுகிறது என்பது. கடைசியாக, வெளியேற்றம். அதாவது, அந்த மருந்து எப்படி நம் உடலில் இருந்து வெளியே போகிறது என்பது.
மருந்தானது சிறுநீர், மலம், வியர்வை அல்லது மூச்சுக காற்று என எப்படி வேண்டுமானாலும் வெளியேறலாம். எனவே இந்த நான்கு விஷயங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் எடுக்கும். ஒவ்வொரு மருந்துக்கும் அந்த நேரம் வேறுபடும். ஆக, மருந்தின் தன்மையைப் பொறுத்து அது, 2 மணி நேரம், 6 மணி நேரம், 8 மணி நேரம், 12 மணி நேரம், 24 மணி நேரம், 7 நாள்கள், 30 நாள்கள் என எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
அதனால் தான் மருத்துவர்கள், சில மருந்துகளை ஒரு வேளைக்கும், சிலதை இரண்டு வேளைகளுக்கும், சிலதை மூன்று வேளைகளுக்கும் பரிந்துரைக்கிறார்கள். மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாத்திரைகளை சரியான இடைவெளியில் எடுத்துக்கொண்டால்தான் அதன் முழுப் பலனும் கிடைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment