டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணி. இவ்வெற்றியின் மூலம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. கொல்கத்தா அணிக்கெதிரான ஒரு ஹோம் கேம் உட்பட இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமிருப்பதால் சென்னை அணியின் பிளே-ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
போட்டி முடிந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி ஆடுகளத்தின் தன்மை தொடங்கி அணியில் தனக்கான பங்களிப்பு வரை பல விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்தார். “உண்மையில், இந்த ஸ்கோர் போதுமானதா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனாலேயே, விக்கெட் எடுப்பதைக் காட்டிலும் உங்களின் சிறந்த பந்துகளை வீசுவதில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று என் பௌலர்களிடம் அறிவுறுத்தினேன். இந்த ஆடுகளத்தில் 170 என்பது நல்ல ஸ்கோராகத் தெரிந்தாலும் இன்னும் கூடுதல் ரன்களை நாங்கள் அடித்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இரண்டாம் பாதியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு உதவியது. அதை முடிந்தவரையில் பயன்படுத்திக் கொண்டோம்.” என்றார்.
இதைத்தொடர்ந்து ருதுராஜைப் பற்றிப் பேசிய தோனி, “ருதுராஜ் நன்றாகவே பேட் செய்கிறார். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடும் திறன் அவருக்கு அபாரமாக உள்ளது. இதுமாதிரியான வீரர்களை கண்டறிவது கடினம்.” என்றார். மேலும் தனக்கான ரோல் பற்றிப் பேசுகையில், “எனக்குக் கிடைக்கும் சொற்ப பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை, எங்கள் திட்டம். இதற்கேற்ப மற்ற வீரர்களும் நல்ல வகையில் பங்களிக்கிறார்கள். இந்தத் திட்டம் இதுவரை நல்ல பலனையே அளித்துவருகிறது. அணிக்கு தேவையான பங்களிப்பைத் தருவதில் மகிழ்ச்சியே!" என்று கூறி முடித்தார் தோனி.
போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பிலும் தோனியின் பேட்டிங் குறித்த கேள்வி தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நீண்ட பேட்டிங் லைன்-அப்பை எங்கள் அணி கொண்டுள்ளதால் பேட்டிங்கில் தோனியின் கவனம் முழுவதும் கடைசி மூன்று ஓவர்கள் மீதே உள்ளது. அதற்கேற்றவாறு அவர் மேற்கொள்ளும் பவர் ஹிட்டிங் பயிற்சி நல்ல பலனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியைப் போன்ற கடினமான பேட்டிங் சூழலில் தோனியின் Cameo மிக மிக முக்கியமானது” என்றார் அவர்.
Comments
Post a Comment