தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அப்போது களியக்காவிளை செக்போஸ்ட் பகுதியில் பத்து சக்கரங்களைக் கொண்ட டாரஸ் லாரிகள் அதிக அளவு கனிமவளங்களுடன் கேரளா நோக்கி பயணிப்பதை கண்டார். உடனே காரில் இருந்து இறங்கி செக்போஸ்டில் பணியில் இருந்த போலீஸாரிடம், "நீங்க என்ன பண்ணுறீங்க. இதுக்கா உங்களை இங்க உக்கார வைத்திருக்கிறாங்க. தம்பி, எல்லாரையும் தொலைச்சுகட்டிபோடுவேன். எஸ்.பி-யை கூப்பிட்டு எல்லா வண்டிகளையும் லாக் பண்ணுங்க.
நான் ஏர்ப்போட்டுல இருந்து வரும்போது ஐம்பது வண்டிகளை பார்த்தேன். பத்து வீலுக்கு மேற்பட்ட வண்டிகள் போகக்கூடாதுண்ணு அரசு ஆர்டர் போட்டிருப்பது தெரியாதா. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீங்க. இங்க கடத்தல் தொழிலா நடக்குது. எவ்வளவு அசிங்கம். எல்லா லாரிகளையும் ஒதுக்கச்சொல்லி சாவிகளை வாங்குங்க" என ஆவேசமானார். பின்னர் எஸ்.பி-யை தொடர்புகொண்டு பேசினார் அமைச்சர் மனோதங்கராஜ். அப்போது அங்கிருந்த 2 லாரிகள் அனுமதி இல்லாமல் கனிமவளங்கள் கொண்டு சென்றது தெரியவந்து. அந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உயர் அதிகாரிகளின் அவசரக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் ஸ்ரீதர், "வெளி மாவட்டங்களில் இருந்து கனிமவளங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகின்றது. அவை முறையான அனுமதிபெற்று வருகின்றனவா, என்பதை கண்காணிக்கவும், வாகனங்களை தணிக்கை செய்யவும் அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கனிமவள புவியியல் ஆய்வாளர், தனி தாசில்தார்கள், போக்குவரத்து அலுவலர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் ஆய்வு நடத்தி கடந்த வாரத்தில் 4 கனரக வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் விதித்துள்ளனர். அனுமதி பெற்ற இடத்தை தவிர்த்து வேறு இடத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்வதை இரவு பகலாக கண்காணிக்க இந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், டிரைவர்களின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்படும்" என்றார்.
Comments
Post a Comment