இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவமனை விரிவாக்க பணியின் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டார் ப.சிதம்பரம்.
அப்போது அவர் பேசுகையில், "கிராமப்புற மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் இருக்கிறார்கள். என் பாட்டனார் காலத்தில் சிமெண்ட் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம் 120 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கிறது.
தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், செங்கோட்டை போன்றவைகள் கட்டப்பட்ட காலத்தை விட, அதிநவீன தொழில்நுட்ப வசதி இப்போது இருக்கிறது. தரமான பொருட்களைக் கொண்டு கட்டுவதால்தான் கட்டடங்கள் நீண்ட காலம் நீடிக்கின்றன. அரசு ஒப்பந்ததாரர்கள் லாபத்தை ஈட்டலாம் தவறில்லை, ஆனால், தரமான கட்டடங்களை கட்ட வேண்டும்" என்று அரசு ஒப்பந்தரார்களை அதிர வைத்தார். இதை அங்கிருந்த கட்சியினரும், பொதுமக்களும் ரசித்தனர்.
அடுத்து, காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ராஜீவ் காந்தி நினைவு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கறுப்பு பணத்தை பதுக்குகிறார்கள் என்று கூறி 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிவித்தது மிகப்பெரிய பிழை, அதை மக்கள் புறக்கணித்தார்கள்.
சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இல்லை. இந்த பணம் கட்டுமான நிறுவனங்கள், மிகப்பெரிய வணிகர்களிடம் அதிகமாக உள்ளதாகவும் அவர்களுக்காகவே சிவப்பு கம்பளம் விரித்தது போல் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை இந்த துக்ளக் தர்பார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீண்டும் 1000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும், ஏழு ஆண்டுகள் கழித்தாவது தவறை திருத்திக் கொண்டார்களே, அதுவே மிக்க மகிழ்ச்சி" என்றார்.
Comments
Post a Comment