Skip to main content

விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இதுவரை 14 பேர் பரிதாபாக உயிரிழந்துள்ளனர். அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருங்கரனை, பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஒரே வாரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின் நேரில் ஆறுதல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அரசியல் ரீதியாக இவ்விவகாரம் தி.மு.க அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. “தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகிவிட்டனர். அவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. ஆளுங்கட்சி பின்புலத்துடன்தான் போலி மதுபானம் விற்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த வழக்கும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

பிரியன்

``தனக்கு அறிக்கை கேட்க உரிமை இருக்கிறது என காட்டிக்கொள்ளும் ஆளுநருக்கு, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தெரியவில்லையா?” என பத்திரிகையாளர் பிரியன் கேள்வி எழுப்புகிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “சட்டப்பிரிவு 167-ன் படி அறிக்கை கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இதை வைத்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவரது கருத்துக்களை இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

2023-ல் இதுவரை 85,000 வழக்கு பதியப்பட்டுள்ளது. 79 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார், குஜராத்தில் வருடத்திற்கு 4,000 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவு. காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதைவிட கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

ஸ்டாலின் - ரவி

நேர்மையான போலீஸ் அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். ஏன் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, திடீரென இவ்வளவு பேரை எப்படி கைது செய்தீர்கள் என்றெல்லாம் ஆளுநர் கேட்க முடியாது. கேட்டிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக் பாக்கெட் அடிப்பவர்கள் முதல் செயின் திருடர்களை வரை ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பதிவுகள் இருக்கும். அந்த பதிவுகளை வைத்து காவல்துறை இப்போது கள்ளச்சாராய வழக்கில் கைதுகள் நடந்திருக்கிறது. ஐ.பி.எஸ் படித்த ஆளுநருக்கு காவல் நிலையத்தின் இந்த சாதாரண நடவடிக்கை கூட தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் வல்லுநர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “அறிக்கை கேட்பதற்கு ஆளுநருக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது. அரசும் அறிக்கை அளித்துவிடும் என்றே கருதுகிறேன். தி.மு.க வீசக்கூடிய கரண்டியில் சாதம் இருக்கிறது என்பதால் மோதல்போக்கு இல்லாத அளவில்தான் இவ்விவகாரத்தை கையாள்கிறது. அதேசமயம் மாநில உரிமை சார்ந்த தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதை காட்டிக்கொள்ளும் வகையிலும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்.

ரவீந்திரன் துரைசாமி

முந்தைய முதல்வர்கள் பாணியில் இருந்து ஸ்டாலின் மாறுபட்டு, இதை எப்படி கையாண்டால் ஆட்சிக்கு பிரச்னைகள் குறைவாக வரும் என்பதையும் பார்ப்பார். மற்றபடி ஆளுநர் இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமாட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால், தி.மு.க அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசும் எடுக்காது. கீரியும் பாம்பும் போல சீறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சண்டை வராது” என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...