கள்ளச்சாராயம் விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாகியிருக்கும் நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். இது குறித்தும், தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும் அந்தக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...
"கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாகியிருப்பதால், தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக திடீரென மதுவுக்கு எதிராக த.மா.கா கிளர்ந்தெழுந்து, கையெழுத்து இயக்கம் செய்வதாக விமர்சனம் எழுந்திருக்கிறதே?"
"தற்போதைய தி.மு.க முழுக்க முழுக்க மதுவை மட்டுமே நம்பியே அரசை நடத்துகிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் திறக்கிறது. தற்போது கள்ளச்சாராய விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுக்கால தமிழக வரலாற்றில் இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்கள் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுப்பது அரசுக்கு அவமானமில்லையா... பூரண மதுவிலக்குதான் தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கை. ஆனால், அதை ஒரேநாளில் அமல்படுத்திவிடமுடியாது என்பதால் இயக்கமாக முன்னெடுக்க த.மா.கா முயல்கிறது."
"நீங்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க டாஸ்மாக் கடைகளை திறப்பதற்காகவே, நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றிய வரலாறு இருக்கிறதே?"
"அப்போதும் நாங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். அ.தி.மு.க அரசும் டாஸ்மாக் வருமானத்தை நம்பி இருந்தது. ஆனால், ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 1,000 கடைகளை மூடினர். ஆனால், தி.மு.க-வினர் மது தொழிலில் ஈடுபடுகின்றனர். அரசும் 50,000 கோடி ரூபாய் இலக்குவைத்து வேலை செய்கிறது. 25 மாதங்கள் ஆட்சியில் ஒரு கடையைக்கூட மூடியதாகத் தெரியவில்லை. 500 கடைகள் மூடுவதாக அறிவிப்பெல்லாம் வெறும் கண்துடைப்புதான். மது விவகாரத்தில் அ.தி.மு.க - தி.மு.க-வை ஒப்பிடமுடியாது. விளையாட்டு மைதானம், திருமண மண்டபம் என எல்லா இடங்களிலும் மது கட்டாயம் இருக்கவேண்டும் என்று தமிழ்நாட்டை தி.மு.க அரசு குட்டிச்சுவராக்குகிறது."
``பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்கிறார் ஜி.கே.வாசன். ஆனால், தமிழ்நாடு நலன் குறித்து எதுவும் பேசியதாகத் தெரியவில்லையே... தனிப்பட்ட லாபத்துக்காகதான் சந்திப்பு நடப்பதாகக் கூறுகிறார்களே?"
"இது மிகவும் தவறான கருத்து. பிரதமர் மோடியைச் சந்தித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழ்நாடு நலன் குறித்துதான் வாசன் பேசுவார். திருப்பூர் தொழிலாளர்கள் பிரச்னை, பழங்குடியினர் நலன் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்."
"ஆனால், பா.ஜ.க-வின் தமிழ்நாடு கிளைக்கழகம் போலத்தான் த.மா.கா செயல்படுகிறது என்கிறார்களே?"
(பலமாகச் சிரிக்கிறார்) ``தி.மு.க தலைவர்கள் டெல்லிக்குப் போவார்கள், பிரதமர் மோடியைச் சந்திப்பார்கள், கட்டியணைப்பார்கள். தோலில் கைப்போட்டுச் செல்வார்கள். ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் யாராவது அங்கு சென்றால் தவறு என்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது பலூன் விடுவார்கள். ஆட்சிக்கு வந்தால், பலூன்விட தயாராக இருந்த காங்கிரஸாரையே கைதுசெய்வார்கள். கேட்டால், ஆட்சியில் இருப்பதால், இணக்கமாக இருக்கிறோம் என்கிறார்கள். உண்மையில் பா.ஜ.க-வின் கிளைக்கழகம் தி.மு.க-தான்."
"அப்படியென்றால், ஆட்சியில் இருப்பவர்களை பா.ஜ.க எதோ ஒன்று செய்து பணிய வைக்கிறது என்கிறீர்களா?"
" அப்படியெல்லாம் இல்லை... நதிநீர் பிரச்னை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எப்போதும் ஒரு முரண்பாடு இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி காவிரி நதிநீர் பிரச்னையின்போது, அ.தி.மு.க எம்.பி-க்களை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினார். ஆனால், மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு சங்கடங்கள் வந்தாலும், தி.மு.க எதிர்ப்பே காட்டுவதில்லையே. தங்களின் சுயலாபத்துக்காக தி.மு.க அடிமை அரசாகச் செயல்படுகிறது."
"காங்கிரஸிடமிருந்து பிரிந்து தனி கட்சி கண்ட மம்தா உள்ளிட்ட தலைவர்களெல்லாம் தற்போது காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருப்பது முரணாக இல்லையா?"
"அரசியல் நிலைப்பாடு என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மம்தா, பா.ஜ.க-வின் அமைச்சரவையில் இருந்திருக்கிறார். அதேபோல, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க-வுடன் இணக்கமாக பயணிக்கிறது. சரத் பவார் சில நேரங்களில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பிரச்னை, உழைப்பவர்களை ஒதுக்கும் போக்கால்தான், அதன் தலைவராக பொறுப்பேற்க ராகுலே தயக்கம் காட்டுகிறார். அந்தக் கட்சிக்கு எப்படி ஆதரவு கொடுப்பது... உண்மையான காங்கிரஸ் நாங்கள்தான்."
"அப்படியென்றால் பா.ஜ.க-வுடனான கூட்டணியால், மதச்சார்பின்மை கொள்கையை த.மா.கா கைவிட்டுவிட்டதா?"
"அப்படி இல்லை. சிறுபான்மையினருக்கு எதிராக தமிழகத்தில் பா.ஜ.க செயல்பட்டால், அதை நிச்சயம் தட்டிக் கேட்போம். கேட்டிருக்கிறோம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளமாட்டோம். தேர்தல் கூட்டணி வேறு. கொள்கை என்பது வேறு."
"காங்கிரஸின் செகண்ட் இன்னிங்ஸ், கர்நாடகாவிலிருந்து தொடங்கியதாகக் கூறுகிறார்களே?"
"கர்நாடக அரசியல் களமென்பது வேறு. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், தி.மு.க தயவால் எம்.எல்.ஏ-க்கள்., எம்.பி-க்களை வைத்திருக்கிறார்கள். பூத் கமிட்டியை வளர்க்கக்கூட எந்த நடவடிக்கையும் இல்லை. வலிமையான தலைவரைக்கூட அவர்களால் உருவாக்க முடியவில்லை. கட்சியின் தலைவர் அழகிரி, வெறும் 4 பேருடன் ரயிலை மறிக்கிறார். உண்மையிலேயே தமிழக காங்கிரஸ் நிலைமையைப் பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது."
"அதனால்தான் கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசனுக்கு அழைப்பு விடுக்கிறாரோ?"
"வாசன் மீது அழகிரி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அதன்படிதான் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இணைவதற்கான சூழ்நிலையை காங்கிரஸ் உருவாக்கவில்லை. அதனால், சேருவதற்கான தேவை ஏற்படவில்லை. ராகுலே தலைமை பொறுப்பை ஏற்க பயப்படும்போது, நாங்கள் ஏன் அங்கு செல்லப்போகிறோம்."
"உண்மையான காங்கிரஸ் நீங்கள்தான் என்கிறீர்கள்... மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை பா.ஜ.க விமர்சிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா?"
"நாங்கள் காந்தி வழி வந்தவர்கள், ஒருபோதும் கோட்சேவை ஆதரிக்க மாட்டோம். விமர்சிக்கும்போது கோபம் வரத்தான் செய்யும். ஆனால், அவர்களை எங்கோ வடநாட்டில் விமர்சிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் அண்ணாமலையோ பிற பா.ஜ.க தலைவர்களோ அதுபோன்று விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சித்தால், நிச்சயம் எதிர்வினை ஆற்றுவோம்."
"2021-ல் குறைந்த மார்ஜினில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தீர்கள். இடைத்தேர்தலில் சீட் கிடைக்காததற்கு வாசன் என்ன சமாதனாம் சொன்னார்?"
"இதில் சமாதானம் சொல்ல என்ன இருக்கிறது. ஆளும் தரப்பு, பணம் பலம், ஆள்பலம் கொண்டு ஈரோடு இடைத்தேர்தலைச் சந்தித்தது. எனவே போட்டி மிக கடுமையாக இருக்கும் என்பதால் எங்களின் கூட்டணி கட்சித் தலைமையான எடப்பாடி, அங்கு நிற்கவேண்டுமென்று விட்டுக் கொடுங்கள் என்று கூறினார். விட்டுக்கொடுப்பது தவறில்லை. நான் நின்றால், எப்படி உழைத்திருப்போமோ, அதைவிட இரண்டு மடங்கு கூடுதலாக உழைத்துக் கொடுத்தோம். அதனால், அ.தி.மு.க த.மா.கா-வுக்குள் ஏற்பட்ட புரிதல் வரும் தேர்தலில் இணைந்து செயல்பட வசதியாக இருக்கும்."
"விட்டுக்கொடுப்பது தவறில்லை. அதற்காக அ.தி.மு.க நிழலில் பயணிப்பதென முடிவெடுத்தால், தமிழ்நாட்டில் த.மா.கா-வின் தேவை என்ன என்ற கேள்வி எழுகிறதே?"
"ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரே நபர் வாசன் மட்டும்தான். எளிமையானவர். த.மா. கா -வின் தேவை என்பதைத்தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான தலைவர் தேவை என்பதுதான்... எங்களை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், தமிழக மக்களுக்குத்தான் நஷ்டம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கூட்டணி அவசியமாக இருக்கிறது. அதற்காக எங்களின் தனித்தன்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம்."
" ராகுல் காந்தியுடன் இளைஞர் காங்கிரஸில் பணியாற்றியிருக்கிறீர்கள். ராகுலின் பதவி நீக்கம், அவரது செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?"
"அவருடன் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நேரடியாகப் பணியாற்றியிருக்கிறேன். அவரது உழைப்பு அபரிமிதமானது. ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றப்பின்னர், அவரைச் சுற்றியிருப்பவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டார். அடுத்தக்கட்ட தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அதனால்தான், காங்கிரஸ் இந்த அளவுக்கு பலவீனமாகிவிட்டது. ராகுலின் பதவி நீக்கம் சட்டரீதியானது என்பதால், அது குறித்துப் பேசமுடியாது. ஆனால், அவர் ஒரு தலைவர். எதைப் பேசினாலும் ஜாக்கிரதையாகப் பார்த்து பேசவேண்டும்."
Comments
Post a Comment