தமிழகத்தில் ஒரே நாளில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் முக்கியமாக ஆவடி மாநகரத்தின் முதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து , திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி-யாக ஆல்பர்ட் ஜான், சென்னை பூக்கடை துணை கமிஷனராக ஸ்ரேயா குப்தா, நாகை மாவட்ட எஸ்.பி-யாக ஹர்ஸ் சிங், சென்னை மாநகர நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராக சீனிவாசன், ஈரோடு மாவட்ட எஸ்.பி-யாக ஜவகர், க்யூ பிரிவு எஸ்.பி-யாக சசிமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
காத்திருப்போர் பட்டியலிலிருந்த எஸ்.பி சரவணன், சென்னை போக்குவரத்து வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக ராஜேஷ் கண்ணன், மாநில குற்ற ஆவணகாப்பக எஸ்.பி-யாக கலைச்செல்வன், வேலூர் எஸ்.பி-யாக மணிவண்ணன், செங்கல்பட்டு எஸ்.பி-யாக சாய் பிரனீத், மதுரை தெற்கு துணை ஆணையராக காத்திருப்போர் பட்டியலிலிருந்த பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி சைபர் பிரிவு எஸ்.பி-யாக ஸ்ரீதேவி, திருச்சி தெற்கு துணை கமிஷனராக எஸ்.பி செல்வகுமார், ஆவடி செங்குன்றம் துணை கமிஷனராக பாலகிருஷ்ணன், பாதுகாப்புப்பிரிவு எஸ்.பி-யாக ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யாக சாமிநாதன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக சேஷாங் சாய், கமாண்டோ பிரிவு எஸ்.பி-யாக அருண் பாலகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
மாநில உளவுத்துறை எஸ்.பி சரவணனுக்கு ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி தீபா சத்தியன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பி-யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். உளவுத்துறை கூடுதல் எஸ்.பி. சரவணகுமாருக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு எஸ்.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி வினோத் சாந்தாராமுக்கு சி.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு எஸ்.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
தாம்பரம் மாநகர கூடுதல் கமிஷனர் காமினி, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு ஐ.ஜி-யாக மாற்றப்பட்டிருக்கிறார். ஆயுதப்படை ஐ.ஜி ராதிகா, அமலாக்கப் பிரிவு ஐ.ஜி-யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் அன்பு, சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். ஆவடி மாநகர கூடுதல் கமிஷனர் நஜ்மல் ஹோடா, தலைமையிட நலப்பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கப் பிரிவு ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி-யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜீவ் குமாருக்கு, டி.ஜி.பி-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆவடி மாநகரத்தில் முதல் போலீஸ் கமிஷனராக இருந்த சந்திப்ராய் ரத்தோர், காவல் பயிற்சி அகடாமி டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அபய் குமார் சிங், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரிய ஊழல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த வன்னிய பெருமாள், அதன் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அதிரடி மாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இது குறித்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர், சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு காய் நகர்த்தி வந்தார். இந்தச் சூழலில்தான், அவர் ஏ.டி.ஜி.பி-யாக இருந்து டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். சீனியர் ஆபீஸரான சந்தீப்ராய் ரத்தோருக்கு தி.மு.க மேலிடத்தில் நல்ல பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நடந்த சில முக்கிய சம்பவங்கள் குறித்து உளவுத்துறை அடிக்கடி ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் சந்தீப்ராய் ரத்தோர், பதவி உயர்வு பெற்றதும் அவர் போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி காலியாகும் தகவலை சில மாதங்களுக்கு முன்பே தெரிந்த சிவில் சப்ளையில் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த அருண் ஐ.பி.எஸ், தி.மு.க மேலிடத்தின் மூலம் அந்தப் பதவியைப் பெற காய் நகர்த்தி வந்தார். அப்போதே அவருக்கு ஆவடி போலீஸ் கமிஷனர் பதவி உறுதி என தி.மு.க மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்திருந்தது. அதன்படி ஆவடி மாநகர போலீஸில் இரண்டாவது கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இதையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய மரணச் சம்பவத்தால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புலனாய்வு (சி.ஐ.யூ) எஸ்.பி-யாக இருந்த ஜெயந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இடமாற்றத்தில் சிலருக்கு ஜாக்பாட்டும், பலருக்கு தண்டனை பதவியும் கிடைத்திருக்கிறது" என்றனர்.
Comments
Post a Comment