தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம் - ஒழங்கு பிரச்னை, கள்ளச்சாராய மரணங்கள், திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரளிக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிண்டியில் பேரணி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பலநூறு பக்கங்கள் கொண்ட அறிக்கையை வழங்கினார் எடப்பாடி. இந்த சந்திப்பின்போது, எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், பென்ஜமின், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் உடன் இருந்தனர். குறிப்பாக, ஆளுநரை சந்திக்க சீனியர்கள் அழைத்து செல்லாதது சிலரை அப்செட்டில் ஆழ்த்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுநரை நேரில் சந்திக்க எடப்பாடியையும் சேர்த்து 10 பேருக்குதான் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, அமைப்பு செயலாளர் என்ற முறையில் பென்ஜமின், பால கங்காவை அழைத்துச் சென்றிருக்கிறார் எடப்பாடி. அதில் தவறில்லை. ஆனால், சீனியர்களான தம்பிதுரை, செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, செம்மலை, பொன்னையன், வளர்மதி ஆகியோரை உடன் அழைத்துச் செல்லாததால், அவர்கள் அப்செட்டாகி விட்டார்கள்.
குறிப்பாக எம்.பி தம்பிதுரை, டெல்லியுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். அவரை ஆளுநர் சந்திப்பில் அழைத்து சென்றிருந்தால், அவரும் சில கருத்துக்களை முன் வைத்திருப்பார். அவரை எடப்பாடி கழட்டிவிட்டுவிடுவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக செல்லூர் ராஜூ தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் மாளிகையிலேயே வெளிப்படுத்தி விட்டாராம். அதேபோலதான், பொன்னையன், செம்மலை ஆகியோர் கடுகடுவெனவே இருந்தனர்.
பெண் என்ற அடிப்படையில் கோகுல இந்திரா அல்லது வளர்மதி ஆகியோரில் ஒருவரையாவது அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இரண்டு பேரையும் எடப்பாடி கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓ.பி.எஸ்-ஸுக்கு மாற்றாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட எல்லா வகையிலும் ஆர்.பி.உதயகுமாரை முன்னிறுத்தி வந்த எடப்பாடி, சமீபத்தில் ஓரம் கட்டுகிறாரோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. கடந்த முறையும் ஆளுநருடான சந்திப்பில் அவரை அழைத்து செல்லவில்லை. இந்த முறையும் அழைத்து செல்லவில்லை. இதனால், அவர் எங்குமே தனது முகத்தை காட்டாமல் அமைதியாகிவிட்டார். இதற்கிடையே, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னை நிச்சயம் எடப்பாடி அழைத்து செல்வார் என்று எண்ணியிருந்தார்கள்போலும். அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது." என்றார் விரிவாக.
Comments
Post a Comment