பெரியவர்கள் சூயிங்கத்தை பயன்படுத்தும்போது சரியாக அதனை மென்று, சுவை போன பின் துப்பிவிடுவதுண்டு. அதுவே குழந்தைகள் பயன்படுத்தும்போது தவறுதலாக அதனை விழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது.
சாதாரணமாக இப்படி விழுங்கும்பட்சத்தில், நம்முடைய செரிமான பாதையில் இருந்து அவை மலக்குடல் வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேறிவிடும். அப்படி வெளியேறவில்லை எனில் பிரச்னை தான்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ நகரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், 40 சூயிங்கத்தை ஒரே நேரத்தில் மென்று விழுங்கி உள்ளான். இதனால் சிறுவனுக்கு வயிற்றுப்போக்கு, வலி எனத் தொடர் வயிற்று உபாதைகள் ஏற்பட்டிருக்கின்றன. கவலையடைந்த அவனின் பெற்றோர், அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர் சிசைட் இஹியோனுனெக்வு (Chizite Iheonunekwu), சிறுவனைப் பரிசோதனை செய்தார். சூயிங்கம் அனைத்தும் வயிற்றில் ஒன்றாகச் சேர்ந்து கட்டியாக மாறியிருந்தன. சிறுவனின் தொண்டைக்குள் மெட்டல் டியூபை (esophagoscope) விட்டு சூயிங்கத்தை வெளியே எடுத்து இருக்கின்றனர். பலமுறை இவ்வாறு செய்து சூயிங்கத்தை அகற்ற வேண்டி இருந்ததால் சிறுவனுக்குத் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிவில் தற்போது சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூயிங்கம், ஏழு ஆண்டுகளாக உடலில் சிக்கியிருக்கும் என முன்பெல்லாம் எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அரிதான நிகழ்வுகளில் மட்டுமே இப்படி நிகழும் என விளக்கமளித்துள்ளனர்.
இது குறித்து உணவியல் நிபுணர் பெத் செர்வோனி கூறுகையில், ``நீங்கள் ஒரு சூயிங்கத்தை விழுங்கியிருந்தால், அது 40 மணி நேரம் கழித்து உங்கள் மலம் வழியே வெளியேறும். ஏனெனில் அதனைச் செரிக்க முடியாததால், அது முழுவதுமாக வெளியேறுகிறது.
ஆனால், சிறிதளவு சூயிங்கத்தை அவ்வப்போது விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இதனை ஜீரணிக்க முடியாததால் குடலில் பிரச்னை ஏற்படும். இதைத் தினமும் அல்லது பல முறை செய்தால், குடல் அடைப்பு ஏற்படலாம். அதன் பிறகு நீங்கள் சாப்பிடும் எதையும் வெளியேற்ற முடியாது. இது வலி மற்றும் அழுத்தத்திற்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் குழந்தைகளுக்கு சூயிங்கம் வாங்கிக்கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!
Comments
Post a Comment