2050-ம் ஆண்டுக்குள் 84 கோடி மக்களுக்கு அடிமுதுகுவலி பாதிக்கலாம்!- ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்
வர்ம் 2050-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் சுமார் 84.3 கோடி பேர் அடி முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
Lancet Rheumatology ஜர்னல் தகவலின் படி,
-
2017-ம் ஆண்டு சுமார் 50 கோடி பேர் அடிமுதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
-
2020-ம் ஆண்டு 61.9 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தினர்.
-
தற்போது இந்த நோய் பாதிப்பு 36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இந்த ஆய்வு, இனி வரும் காலத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அடி முதுகுவலி பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறது. 1990-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை உள்ள 204 நாடுகளின் தரவுகளின் படி, 2050-ம் ஆண்டுக்குள் சுமார் 84.3 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த நோயில் முக்கிய காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும், வயது முதிர்ந்த மக்கள்தொகையும் கூறப்படுகிறது. மேலும் இந்த நோய் சர்க்கரைநோய், இதய நோய், மனநலம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகவும் அமையலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வு குறித்து சென்னையைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவர் தினேஷ் சவுத்ரியிடம் பேசினோம்.
``இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளிலும் அடி முதுகுவலி பரவலாக இருந்து வருகிறது. நீண்ட நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், அதிக உடல் எடை உடையவர்கள், ஐ.டி வேலை போன்று நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் போன்றோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆய்வில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் அடி முதுகுவலியால் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இளைய வயதுள்ள மக்கள்தொகை கொண்ட நாடுகள். மேலும் இந்த நாடுகளில் தற்போது ஐ.டி போன்ற தொழில்களில் தான் மக்கள் அதிகம் வேலை செய்து வருகிறார்கள்.
2050-ம் ஆண்டின் போது, இவர்கள் கிட்டத்தட்ட முதுமையைத் தொட்டுவிடுவார்கள். இதனால் இவர்கள் இப்போது செய்துவரும் தொழில்கள், அப்போது முதுகுவலியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
உடல் எடையைக் குறைப்பது, புரோட்டின் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக் கொள்வது, யோகா செய்வது, வயிற்றுப் பகுதியில் இருக்கும் தசைகள் மற்றும் தண்டுவட தசைகளை பலப்படுத்துதல், நீண்ட நேரம் அமரும்போது சரியாக அமருதல் போன்றவற்றைச் செய்வதன்மூலம் இந்த வலியைக் குறைக்கலாம்'' என்கிறார்.
Comments
Post a Comment