2016-ல் பிரதமர் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது அறிவித்தார். அதைத்தொடர்ந்தது, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் மக்களிடம் மிகப் பரவலாகப் புழங்கிவந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே புழக்கத்திலிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. அதோடு, 2,000 ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணத்தை மேலும் பதுக்கிவைக்கவே உதவியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தன.
இப்படியிருக்க 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாகக் கடந்த வாரம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று முதல் செப்டம்பர் 30-க்குள் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம், டெபாசிட்டும் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி முதலில் ஆதரிக்கவில்லையென்றும், பின்னர் தயக்கத்துடனே அதற்கு ஒப்புக்கொண்டார் எனவும் பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடக நேர்காணலில் பேசிய மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, ``முதலில் 2,000 ரூபாய் நோட்டுகளை கொண்டுவருவதற்கு பிரதமர் மோடி ஆதரவாக இல்லை. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படவிருந்ததால், 2,000 ரூபாய் நோட்டுகளுக்குத் தயக்கத்துடன் அனுமதியளித்தார்.
புதிய நோட்டுகளைக் கொண்டுவர குறைந்த கால அவகாசமே இருந்ததால் 2,000 நோட்டுகளை அச்சடிக்க வேண்டும் என்று அதில் பணிபுரிந்த குழு முன்மொழிந்தது. ஆனால் மோடிக்கு அதில் கொஞ்சம் கூட மகிழ்ச்சியில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்கவே அவர் முயற்சி செய்தார். அதோடு, அதிக ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் வந்தால் பதுக்கிவைப்பது அதிகரித்துவிடும் என்று அவர் கருதினர். கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது" என்றார்.
Comments
Post a Comment