Tamil News Live Today: ``நடந்திருப்பது சாதாரண ஊழல் அல்ல; தமிழகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊழல்” - நாராயணன் திருப்பதி
``தமிழகம் இது வரை கண்டிராத மிகப் பெரிய ஊழல்!”
தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ``சௌத் இந்தியன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தை கடந்த பல வருடங்களாக மோசடி செய்து வந்துள்ளது அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில் தெரிய வந்துள்ளது. நிலக்கரி கையாள்வதில் இது வரை 360 கோடி ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு தொகையை அமலாக்கத்துறை முடக்கியுள்ள நிலையில், மேலும் 1000 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஊழல் தொகையோடு இதற்கான வட்டியை சேர்த்தால் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலின் மதிப்பு உயரும்.
மேற்கண்ட இரு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து 2001 முதல் மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பல அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், அரசியல்வாதிகளின் பின்புலமில்லாமல் இவை தொடர்ந்திருக்க சாத்தியமே இல்லை. தமிழகம் ஊழலில் மூழ்கி திளைத்திருக்கிறது என்று நாம் தொடர்ந்து கூறிய போதெல்லாம் 'தமிழ், தமிழன், தமிழ் நாடு, மாநில சுயாட்சி' என்று உணர்வுகளை தூண்டிவிட்டு மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர் இந்த கொள்ளையர்கள். மின் கட்டணம் ஏறும் போதெல்லாம், 'ஐயோ மக்களை துன்புறுத்துகிறார்களே' என்று நீலிக்கண்ணீர் வடித்த சில நயவஞ்சகர்கள் தான் இந்த கொள்ளையை அரங்கேற்றி கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.
நடந்திருப்பது சாதாரண ஊழல் அல்ல. மிக கொடிய 'ஆக்டோபஸ் ஊழல்'. இன்றைக்கு தமிழ் நாடு மின் பகிர்மான கழகம் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதற்கும், அதன் காரணமாக மின் கட்டணம் அதிகளவில் உயர்ந்திருப்பதற்கும் காரணமான கொடியவர்கள் இந்த ஊழல்வாதிகள். ஆனால், தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்வது போல் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் என்று கட்டுக்கதைகள் பல சொல்லி மக்களை ஏமாற்றி தங்கள் வாழ்வினை, தங்கள் குடும்பத்தை செல்வ செழிப்போடு வைத்து கொண்டிருக்கிறார்கள் கருங்காலிகள்.
இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாதீர்கள் என்று வலியுறுத்தியே மானியத்தை மக்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால் அப்படி செய்தால் மக்கள் அரசு இலவசமாக கொடுப்பதை மறந்து விடுவார்கள் என்று எண்ணியே, அதை செயல்படுத்த மறுக்கிறது மாநில அரசு. வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு விட்டால் தங்களின் ஊழல் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதாலேயே மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு உதய் மின் திட்டத்தில் கொண்டு வந்துள்ளதற்கு காரணமே ஊழலை ஒழிக்கத்தான் என்பதை அறிந்து கொண்டே நாடகமாடி தமிழர்களை ஏமாற்றி கொண்டிருக்கின்றனர் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று நாடகமாடும் நயவஞ்சகர்கள்.
அரசியல்வாதிகளின் கூட்டு இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இதன் பின்னணியில் உள்ள அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழில் அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மொழி உணர்வை தூண்டி விட்டு மக்களை ஏமாற்றும் மோசடி பேர்வழிகளை மக்கள் உணர்ந்தால் மட்டுமே இது போன்ற ஊழல்களை தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல் மொழி உணர்வுகளை தூண்டி விட்டுக்கொண்டு, இலவசங்களை அறிவித்து கொண்டு தமிழர்களை ஏமாற்றி கொண்டேயிருப்பார்கள் கேடு கெட்ட ஊழல்வாதிகள்.” என்று தெரிவித்திருக்கிறார்.
டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கும் விதமாக இன்று காலை 11.30 மணிக்கு குடியரசு தலைவர் சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்.
Comments
Post a Comment