Skip to main content

KKRvGT: `குறுக்க இந்த விஜய் வந்தா..' - வேட்டையாடிய விஜய் சங்கர்; வீழ்ந்துபோன கொல்கத்தா!

விஜய் சங்கரால் இரக்கமேயின்றி சூறையாடப்பட்ட வருண் சக்ரவர்த்தியின் ஒரே ஓவர் இரு புள்ளிகளை குஜராத்தின் கணக்கில் வரவு வைத்தது.

ஆடிய 7 போட்டிகளில் பாண்டியாவின் படை தோல்விமுகம் கண்டிருந்தது இரண்டில் மட்டுமே. அதில் ஒன்று மறக்கவே முடியாத ரிங்குவின் சிக்ஸர் அடைமழையால் நேர்ந்திருந்தது. எனவே வாங்கிய வலியை வட்டியோடு திருப்பித் தரும் வழிமுறைகளோடு களமிறங்கியது குஜராத்.

KKRvGT

டாஸுக்கு முன்பே குறுக்கிட்ட சாரலாலும், மேகம் சூழ்ந்த சூழலாலும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார் பாண்டியா. கேகேஆரின் பக்கமோ ஜேசன் ராயின் காயம் குர்பாஸினை பிளேயிங் லெவனுக்குள் இழுத்து வந்திருந்தது. இதன் பின்விளைவுகள்தான் முதல் பாதியில் ஒட்டுமொத்த அணியையும் தாங்கிப்பிடித்தன.

டெத் ஓவர் வரை அணியைக் கைப்பிடித்து குர்பாஸ் அழைத்துச் செல்ல அதன்பிறகு இறுதிக்கட்ட பணிகளை ரசலின் பவர் ஹிட்டிங் பார்த்துக் கொண்டது.
குர்பாஸ்

குர்பாஸ் மற்றும் ரசல் தாங்கள் சந்தித்த 58 பந்துகளில் மொத்தமாக 115 ரன்களைக் குவித்திருந்தனர். ஆகமொத்தம் உதிரிகளையும் நீக்கிக் கணக்கிட்டால் மீதமிருந்த 62 பந்துகளில் மற்ற வீரர்கள் இணைந்து எடுத்த ரன்கள் 61 மட்டுமே. ஆக இந்த இரு சக்கரங்கள் இழுத்துக் கொண்டு உருண்டு ஓடாவிட்டிருந்தால் கேகேஆரின் வண்டி எப்போதோ சாய்ந்திருக்கும்.

இருவரிலும் பெரும்பாலான ஓவர்களை ஆக்ரமித்ததோடு பெரிய தாக்கத்தையும் குர்பாஸ் ஏற்படுத்தியிருந்தார். இத்தொடரின் தொடக்கத்தில் ஜேசன் ராய் இணைவதற்கு முன்பாக ஒருசில போட்டிகளில் குர்பாஸை ஓப்பனிங்கில் கேகேஆர் முயன்று பார்த்திருந்தது. ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அவரது தேர்விற்கான நியாயத்தைக் கற்பிக்க சற்றே சராசரியான ஆட்டமே அவரிடமிருந்து வெளிப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் மூன்று போட்டிகளில் ஜேசன் வரவால் பெஞ்சில் அமர்த்தப்பட்டு திரும்பி வந்திருந்தார் குர்பாஸ். அதுவும் யாருக்கு எதிராக? கடந்தாண்டு முழு சீசனும் தனக்கு ஒரு போட்டியில்கூட வாய்ப்பளிக்காத குஜராத்துக்கு எதிராக. சேர்த்து வைத்திருந்த அத்தனை கோபத்தையும் எதிரணி மேல் இரட்டிப்பாக்கி இறக்கினார் குர்பாஸ்.

மறுமுனையில் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அற்புதமான இன்னிங்ஸ்களை அரங்கேற்றினாலும் அதன் மீட்டுருவாக்கத்தை ஐபிஎல்லில் நிகழ்த்த ஜெகதீசனால் முடியவில்லை. வழக்கமான பேட்டிங் ஆர்டர் குளறுபடிகளினால் முன்கூட்டியே இறக்கப்பட்ட தாக்கூரும் கைகொடுக்கவில்லை. வெங்கடேஷ், ராணா என எல்லோருமே சொற்ப ரன்களோடே ஆட்டமிழந்தனர். ஆனால் குர்பாஸின் பேட் மட்டும் ஓய்வறிக்கவில்லை.

பாண்டியாவின் பவர்பிளே ஓவர்கள் சேதாரத்தை சந்தித்தன. மற்றபடி எப்போதுமே நன்றாக வீசும் ஷமி மட்டுமல்ல அனுபவமற்ற ஜோஸ்வா லிட்டில் மற்றும் நூர் அஹ்மத்தின் ஸ்பெல்கள்கூட நெருக்கடியைத் தந்தன. எனவே அவர்களிடத்தில் சற்றே அடக்கி வாசித்திருந்த குர்பாஸ் ஒருகை பார்த்தது ரஷித் கானின் ஓவர்களைத்தான். பொதுவாகவே ரஷித்தின் பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் அஞ்சி நடுங்குவதுண்டு.

ரஷீத் கான்
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் அவர் வீசிய பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸரெல்லாம் அடித்து 311 ஸ்ட்ரைக்ரேட்டோடு 28 ரன்களைக் குவித்திருந்தார். இந்தப் போட்டியில் குர்பாஸும் அதையே திரும்பவும் செய்திருந்தார்.

சொந்த ஊர் பாசமோ வலைப்பயிற்சியில் பலமுறை அவரை எதிர்கொண்ட அனுபவமோ, ரஷித்தின் கைகளிலிருந்து பந்து விடுபடும் முன்பே வேரியேஷனைக் கண்டறிந்து அதற்கான விடையோடு தயாராவது குர்பாஸுக்கு சுலபமாயிருந்தது. லெந்தை அவர் கண்டறிந்த விதமும், அவர் காட்டிய தன்னம்பிக்கையும் ரஷித்துக்கு எதிராக பெரும்பாலானவர்களால் நிகழ்த்திட முடியாதது. அவர் வீசி சந்தித்த 11 பந்துகளில் 30 ரன்களை குர்பாஸ் குவித்திருந்தார். மோஹித் தவிர மற்ற எல்லோருடைய பந்துகளிலுமே பந்தை பவுண்டரி லைனைத் தாண்டவும் வைத்திருந்தார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த குர்பாஸ் அதன்பின் சந்தித்த 12 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து கலங்கடித்தார். 81 ரன்களை எட்டியிருந்தவரை சகநாட்டு வீரரான நூர் அஹ்மத்தின் லோ ஃபுல் டாஸ் வெளியேற்றியது, அதனை கேட்ச் பிடித்ததும் இன்னொரு ஆஃப்கன் வீரரான ரஷித் தான்.

குர்பாஸ் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அணியை முன்னோக்கி நகர்த்தியது ரசல்தான். சந்தித்த 19 பந்துகளில் 34 ரன்களை இறுதி ஓவர்களில் சேர்த்திருந்தார். ரஷித்தின் ஒரே ஓவரில் அடித்த இரு சிக்ஸர்களிலும் இறுதியில் ஷமி ஓவரில் அடித்த சிக்ஸரிலும் பழைய ரசலின் சாயலை பார்க்க முடிந்தது. குஜராத்தின் பந்துவீச்சு வழக்கத்திற்கு மாறாக ஓரளவே சிறப்பாக இருந்தது. ஃபீல்டிங்கிலோ எளிதான கேட்ச்களையும் தவறவிட்டனர். மோஹித் பிடித்த தாக்கூரின் கேட்ச் போல கடினமானவற்றைக் கூடக் கைப்பற்றினர்.

ரசல்

180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் அது சவாலானதல்ல 20 ரன்கள் வரை குறைவாகவே வந்திருக்கின்றது என ரசலும் முதல் பாதியின் முடிவில் கூறியிருந்தார். மற்ற பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இல்லாததே அதற்கான முக்கியக் காரணம். பனிப்பொழிவு குறுக்கிடாது என்பது கேகேஆருக்கு சாதகமான அம்சமென்றாலும் குஜராத்தின் பேட்டிங் யூனிட் அத்தனை சுலபமாக பணிந்து விடுவதல்ல. எனவே மோதல் ருசிகரமானதாகவே தொடருமென எதிர்பார்க்கப்பட்டது.

பவர்பிளேயில் அதிரடியாகவே குஜராத் தொடங்கியது. குறிப்பாக கில் தனது அற்புதமான டைமிங்காலும் ஷாட் தேர்வுகளாலும் ரன்களின் வரத்தை துரிதப்படுத்தினார்‌. 52 ரன்களை அந்தக் கட்டத்தில் சேர்த்து விட்டனர். சாகாவின் விக்கெட்டை ரசல் வீழ்த்தியது மட்டுமே கேகேஆருக்கு சற்றே ஆறுதல் அளித்த ஒரே நல்ல விஷயம். மற்றபடி இந்த கிக் ஸ்டார்ட் அடுத்து வரவிருந்த வீரர்கள் மீதான அழுத்தத்தை சற்றே குறைத்தது.

வெல்வதற்கான ஒரே வழியாக ஸ்பின்னை மட்டுமே நம்பும் அணிகளில் கேகேஆரும் ஒன்று. இந்தப் போட்டியிலும் அதையே நாடியிருந்தனர். நான்காவது ஓவரிலேயே வருணைக் கொண்டு ஸ்பின் சாட்டையோடு வியூகம் வகுக்கத் தொடங்கினார் ராணா. இரு முனைகளிலும் ஸ்பின்னை வைத்தே வலை விரித்தார். இந்த சீசனில் இப்போட்டிக்கு முன்னதாக மிடில் ஓவர்களில் குஜராத் சராசரியாக 90.25 ரன்களை எடுத்திருந்தது. பல போட்டிகளில் மற்ற அணிகளை விட குஜராத் முந்தியதும் இதனால்தான். இப்போட்டியில் அது 77 ஆக சற்றே குறைந்திருந்தது. சுயாஸ் ஷர்மாவின் இரு ஓவர்களும், நரைனின் ஒரு ஓவரும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தாலும் மற்ற ஓவர்களில் ஸ்பின்னர்கள் இறுக்கிப் பிடித்ததுதான் காரணம். ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகிய இரு செட்டில் ஆகியிருந்த பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தது கேகேஆருக்கு சற்றே சாதகமாகத் தோன்றினாலும் களத்தில் மில்லர் இருக்கும் வரை குஜராத்துக்கு எவ்வித இலக்கும் எட்டக் கூடியது என்பதால் கேகேஆரால் ஆற அமர யோசிக்க முடியவில்லை.

இறுதி 5 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலை.

ஒன்றிரண்டு ஓவர்கள் துல்லியமாக வீசப்பட்டால் வெற்றி கேகேஆரின் பக்கம். ஆனால் அத்தகைய ஒரு ஓவர் வீசப்பட குஜராத் பேட்ஸ்மேன்கள் அனுமதிக்கவே இல்லை.

சமாளிக்க வேண்டியது மில்லர் மட்டுமே என அவர்கள் நினைக்க இன்னொரு முனையிலிருந்த விஜய் சங்கர் தான் இன்னமும் ஆபத்தானவராக உருமாறினார்.
விஜய் சங்கர் - மில்லர்

16 ஓவர்களின் முடிவில்கூட 16 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்த விஜய் சங்கர் வருண் சக்ரவர்த்தி வீசிய அதற்கடுத்த ஓவரை சிக்ஸர்களால் சிறப்பித்தார். 24 ரன்கள் சேர்க்கப்பட்ட அந்த ஒரு ஓவர் போட்டியின் முடிவையே மாற்றி எழுதி விட்டது. 24 பந்துகளில் விஜய் சங்கரின் அரைசதம் வந்து சேர 18-வது ஓவரிலேயே, 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே போட்டியை வென்று விட்டது குஜராத். தான் சந்தித்த இறுதி எட்டு பந்துகளில் 30 ரன்களை வெறித்தனமாக விஜய் சங்கர் குவித்திருந்தார்.

கில் - பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் பாதிப் போட்டியை வென்று தர இறுதியில் செய்ய வேண்டியதை விஜய் சங்கர் - மில்லர் கூட்டணி மிகச் சிறப்பாகச் செய்து முடித்தது. தாக்கூருக்கோ, டேவிட் வெய்ஸுக்கோ ஒரு ஓவர் கூடத் தரப்படவில்லை. ஸ்பின்னை மட்டுமே நம்பி 18-ல் 12 ஓவர்கள் அவர்களுக்கே தரப்பட்டது. அந்த அணுகுமுறை குஜராத்துக்கு எதிராக கைகொடுக்கவில்லை.

சென்ற போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் இப்போட்டியிலோ 50 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து பலத்த சேதாரத்தை சந்தித்தார். ரிங்குவின் சிக்ஸர்களால் சூழப்பட்ட ஓவருக்கான பழி வாங்குதல் நடவடிக்கையாக விஜய் சங்கரின் அதிரடி இருந்தது. இப்படி மற்றவை எல்லாம் மாறினாலும் குஜராத்தின் வெற்றிக் கதை மட்டும் மாறிலியாக எப்போதுமே தொடர்கிறது. இதனால் வெல்கிறார்கள் அதனால் வெல்கிறார்கள் என குறிப்பிட முடியாதபடி ஏதோ ஒன்று அன்றைய நாளில் க்ளிக் ஆகி வெற்றியை குஜராத்தின் பக்கம் சேர்த்து விடுகிறது.

Vijay Shankar
ப்ளே ஆஃப் வாய்ப்பு மட்டுமல்ல கோப்பையும் தூரமல்ல என்பதே வெற்றியை வாடிக்கையாக்கி உள்ள குஜராத் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சொல்லும் செய்தி.

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...