Doctor Vikatan: என் அம்மாவுக்கு 50 வயது. அவருக்கு விடாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக அரைநாள் கூட இப்படி இருந்திருக்கிறது. ஜெலுசில் மாத்திரை போட்டால்தான் சரியாகிறது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.
முதலில் ஏப்பம் வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம். சாப்பிடும்போது கொஞ்சம் காற்றையும் நாம் விழுங்குவோம். அளவுக்கதிகமான காற்றை விழுங்கும்போது, அது வெளியே வரும்போது ஏப்பமாக வெளியேறுகிறது.
ஏப்பம் வர வேறு சில காரணங்களும் இருக்கலாம். கார்பனேட்டடு பானங்கள், குளிர் பானங்கள் அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை, குறிப்பாக புரொக்கோலி, முட்டைகோஸ், பீன்ஸ் போன்றவற்றைச் சாப்பிடும்போதும் சிலருக்கு ஏப்பம் அதிகம் வரலாம்.
இவை தவிர அதிகம் அமிலம் சுரக்கும் Gastroesophageal reflux disease (GERD) பாதிப்பு உள்ளவர்களுக்கு வயிறு புண்ணாகி, அதிக வாயு சேர்ந்து, ஏப்பமாக வெளியேறும். ஏப்பம் என்பது எல்லோருக்கும் வரும் இயல்பான விஷயம்தான் என்றாலும், அது தீவிரமாகும்போது வெளியிடங்களில் ஒருவித அசௌகர்யத்தை ஏற்படுத்தும்போது பிரச்னையாக மாறுகிறது.
இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, சாப்பிடும்போது நன்கு மென்று சாப்பிட வேண்டியது அவசியம். கார்பனேட்டடு பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவிலான நார்ச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பிரச்னை தீவிரமாகும் போது மருத்துவ ஆலோசனையை நாடலாம். அமிலச் சுரப்பைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மற்றபடி உணவுப்பழக்கத்தில் சின்னச் சின்ன மாறுதல்களை மேற்கொள்வதன் மூலமே இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment