Doctor Vikatan: என் வயது 59. ரத்தச்சர்க்கரை அளவு 270. உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாக உள்ளது. ரத்த அளவு 10 ஆக உள்ளது. கொழுப்பும் உள்ளது. என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?
- Rasheed, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஹீமோகுளோபின் அளவா அல்லது HbA1c எனப்படும் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவா என்று தெரியவில்லை. ஒருவேளை அது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் இந்த அளவானது மிக ஆபத்தானது. அதாவது உங்களுக்கு ரத்தச் சர்க்கரையானது கட்டுக்கடங்காமல் இருக்கிறது என அர்த்தம்.
கட்டுப்படுத்தவியலாத நீரிழிவு பாதிப்பில் ஒருவருக்கு ஸ்கின் டர்கர் (Skin turgor) எனப்படும் சருமத்தின் மீள்தன்மை பாதிக்கப்படும். அதன் காரணமாக சருமத்தின் ஈரப்பதமானது குறைந்திருக்கும். சருமத்தில் ஈரப்பதம் குறையும்போது உடல் முழுவதும் வெடிப்பு போல ஏற்படலாம. அதன் தொடர்ச்சியாக அரிப்பும் ஏற்படலாம். எனவே இது குறித்து நீங்கள் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே சொன்னது போல ரத்த அளவு என நீங்கள் குறிப்பிட்டிருப்பது ரத்தச் சர்க்கரையின் சராசரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் இன்சுலினுக்கு மாறுவது நல்லது. உடனடியாக நீரிழிவு மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை பெறுங்கள். ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவருவதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான தீர்வாக இருக்கும்.
கொழுப்பு அதிகமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நீங்கள், அது எந்த வகையான கொழுப்பு என குறிப்பிடவில்லை. நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலே கெட்ட கொழுப்பு குறையும். இதற்கும் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற்று கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment