`இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தான் பதவிவகித்த 2012-2022 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒரு சிறுமி உட்பட 10-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அவரைக் கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்!' எனக் கோரி பலமாதங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இந்திய மல்யுத்த வீரர்கள். நீண்டப் போராட்டம், நீதிமன்றத்தின் அழுத்தம் உள்ளிட்டக் காரணங்களால் தற்போது பிரிஜ் பூஷண்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், `அவரைக் கைதுசெய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும்' என மல்யுத்த வீரர்கள் உறுதியாக நிற்கின்றனர். அவர்களின் நீதிகேட்கும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்துவருகிறது.
போராட்டத்தின் பின்னணி:
கடந்த ஜனவரி 18-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கிய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ``இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும் உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் தொடர்ந்து இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். உடல் மற்றும் மனரீதியாக வீராங்கனைகளைத் துன்புறுத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரி தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் என அடுத்தடுத்து மல்யுத்த வீராங்கனைகளும் போராட்டத்தில் குதித்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது.
கண்டுகொள்ளாத விளையாட்டுத்துறை:
அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தார். அதையடுத்து அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மல்யுத்த வீராங்கனைகளும் தங்களின் மூன்றுநாள் தொடர்போராட்டத்தை திரும்பப் பெற்றனர். அந்த நிலையில், மேரிகோம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு விரிவான விசாரணை நடத்தி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் விசாரணை அறிக்கையும் சமர்ப்பித்தது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அடிப்படையில் பிரிஜ் பூஷண்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அறிக்கையை வெளியிடாமலும் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம். மேலும், டெல்லி காவல்துறையில் வீராங்கனைகள் அளித்த புகாரும் கிடப்பில் போடப்பட்டது.
மீண்டும் தொடங்கியப் போராட்டம்:
குறைந்தபட்சம் பிரிஜ் பூஷண்மீது வழக்கு பதிவுகூட செய்யப்படாத நிலையில், வெகுண்டெழுந்த மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். கடந்தமுறை `அரசியல் கட்சிகள் யாரும் எங்கள் போராட்டத்துக்கு வரவேண்டாம்; அரசியலாக்க வேண்டாம்' எனக் கேட்டுக்கொண்ட மல்யுத்த வீராங்கனைகள், இந்தமுறை அனைத்து தரப்பின் ஆதரவையும் நாடினர். அதைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அபிநவ் பிந்த்ரா உள்ளிட்ட விளையாட்டுத்துறை வீரர்கள் ஆதரவளித்தனர். அதே சமயம் இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் பி.டி.உஷா, ``மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்குச் சமம். இது நாட்டுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல. இந்தியாவின் நற்பெயரைத்தான் கெடுக்கும்!" என விமர்சித்தார். இதற்குப் போராடும் வீராங்கனைகள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்வினையாற்றினர்.
``பி.டி உஷா ஒரு பெண்ணாக இருந்தும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நாங்கள் அப்படி என்ன ஒழுங்கீனம் செய்துவிட்டோம்... நாங்கள் இங்கு அமைதியாகத்தானே போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் நாங்கள் ஏன் இப்படி செய்திருக்கபோகிறோம்?" எனப் போராடும் மல்யுத்த வீராங்கனைகள் கொதித்தெழுந்தனர். மேலும், ``மனதின் குரல் நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி குறித்து பேசிவரும் பிரதமர் மோடிக்கு எங்கள் மனதின் குரல் கேட்கவில்லையா... மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஏன் இப்போது அமைதியாக இருக்கிறார்?" என தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு பதிந்த காவல்துறை:
இந்த நிலையில், மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது, காவல்துறை வழக்கு பதிவுசெய்யாதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மல்யுத்த வீராங்கனைகள் சார்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு 28-04-2023 அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `இந்த வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர்கூட பதிவுசெய்யப்படவில்லை' எனக் கேள்வியெழுப்பியதோடு, உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அதற்குப் பதிலளித்த டெல்லி காவல்துறை தரப்பு, `இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர்மீது வழக்கு பதிவுசெய்யப்படும்' என உறுதி அளித்தது. இந்த நிலையில், பிரிஜ் பூஷண் ஷரண் சிங்மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது டெல்லி காவல்துறை.
தொடரும் போராட்டம், பெருகும் ஆதரவு:
இந்த நிலையில், வழக்கு பதிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மல்யுத்த வீராங்கனைகள், ``நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு டெல்லி காவல்துறைமீது நம்பிக்கை இல்லை. இந்தப் போராட்டம் வெறும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் ஷரண் கைதுசெய்யப்பட வேண்டும். அவர் தலைவர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்படவேண்டும். அவருக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்! அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்!" என்று தெரிவித்திருக்கின்றனர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு சானியா மிர்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்தி, இடதுசாரி கட்சியினர் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment