தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பெரிய பட்டாளத்துடன் டெல்லி சென்று திரும்பியிருக்கிறார்.
பொதுச் செயலாளரான பின்னர், முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்து இருக்கிறார் என்று தகவல் நமக்கு கிடைக்கிறது. அத்தோடு, அண்ணாமலையை அருகில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க தலைவர்களிடம் அமித் ஷா பேசியது புதிய விவாதங்களை கிளப்பிவிட்டு இருக்கிறது.
இதுகுறித்து எடப்பாடியுடம் டெல்லி சென்ற சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.
``அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அச்சாரம் போட்டு இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் கொழுந்துவிட்டு எரியும் பி.டி.ஆர் ஆடியோ, ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதான ஐ.டி ரெய்டு உள்ளிட்டவை குறித்த பைல்களை, அமித் ஷாவிடம் வழங்கினார் எடப்பாடி. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அவரது வார் ரூமின் செயல்பாடுகள் குறித்தும் கூட விவாதிக்கப்பட்டது. எங்களுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசுகிறார்.
இதனால், கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதோடு, தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு அதிகமாகியிருக்கிறது. அ.தி.மு.க எதிர்க்கட்சியாக செயல்பட தடையாக இருப்பதே தமிழக பா.ஜ.க-வும், ஓ.பி.எஸ்-ஸும்தான். அதை நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்று அமித் ஷாவிடம் தெரிவித்தோம். ஆனால், அதுகுறித்து எதுக்குமே அமித் ஷா பெரிய அளவில் ரியாக்ஷன் செய்யவில்லை. மாறாக, அண்ணாமலையை அறைக்குள் அழைத்து, அமர வைத்தார் அமித் ஷா.
இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே, அண்ணாமலையின் செயல்பாடு, தலைமைக்கு தெரியாமலா இருக்கும் என்ற எங்களின் சந்தேகம், அமித் ஷாவின் செயலில், உறுதியாகிவிட்டது. அண்ணாமலையின் செயல்பாடுதான் கூட்டணியை பாதிக்கும் வகையில் இருக்கிறதென்று நாங்கள் சொன்னபோது, அவரை தலைமை கண்டித்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. அதேநேரத்தில், அரை மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், அண்ணாமலை ஒரு வார்த்தைக்கூட பேச அனுமதிக்கவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா 'பழைய கதையை விடுங்கள். தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது. இந்நிலையில், கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பங்களை இருதரப்புமே தவிர்க்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும்' என இறங்கி வந்து பேசியதால், அதற்கு மேல் எங்களால் பேச முடியவில்லை.
தொடர்ந்து, சீட் விவகாரங்கள் குறித்து மேலோட்டமாக பேசப்பட்டது. அமித் ஷாவே சமாதானப் புறாவை பறக்கவிட்டதால், மீண்டும் அண்ணாமலையிடனான பிரச்னை குறித்து பேச வேண்டாம் என்ற முடிவோடு தான் வெளியில் வந்தோம். அதைதான் எடப்பாடி பிரஸ்மீட்டில் தெளிவுபடுத்தினார். அமித் ஷாவின் பேச்சுக்கு மதிப்பளித்து நாங்கள் சமாதானத்துக்கு முன் வந்துவிட்டோம். டெல்லிக்கு ஒருமுகம் இங்கு ஒரு முகம் என்பதெல்லாம் இல்லை. எதற்காக வந்தோம் என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம். ஆனால், அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அ.தி.மு.க-வை மீண்டும் சீண்டினால், இனி தலைமையிடம் போய் நிற்க போவதில்லை. நாங்களே நேரடியாக களத்தில் இறங்குவோம் என்ற முடிவையும் எங்கள் தலைமை எடுத்து இருக்கிறது." என்றார் விரிவாக...
Comments
Post a Comment