Doctor Vikatan: எனக்கு வயது 53. அடிக்கடி நெஞ்சுவலியும் முதுகுவலியும் வருகிறது. ஒவ்வொரு முறையும் அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என பயப்படுகிறேன். மருத்துவரைப் பார்த்தபோது அசிடிட்டி என்று சொல்லி, மருந்துகள் கொடுத்தார். ஆனாலும் அதிலிருந்து முழுமையாக என்னால் மீள முடியவில்லை. அசிடிட்டிக்கும் நெஞ்சுவலிக்கும் என்ன தொடர்பு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.
உணவுக்குழாயின் அருகில் வால்வு ஒன்று இருக்கும். அதில் கசிவு ஏற்படும்போது இரைப்பையில் சுரக்கும் அமிலமானது எதுக்களித்து வந்து நெஞ்சுவலியையும் முதுகுவலியையும் ஏற்படுத்தலாம். உணவுக்குழாய் என்பது இதயம் துடிப்பதைப் போல மென்மையாக இயங்கிக்கொண்டே இருக்கும். அமிலம் எதுக்களித்து வரும் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த இயக்கம் முறையற்று இருக்கும். அதன் காரணமாக நெஞ்சுவலியை உணர்வார்கள். சாதாரணமாக இரைப்பையில் சுரக்கக்கூடிய அமிலமானது ரிவர்ஸில் உணவுக்குழாய்க்கு வரும்போது நெஞ்சுவலி வரலாம்.
ஹார்ட் அட்டாக்கின் காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை அஜீரணக் கோளாறு என அலட்சியம் செய்பவர்களைப் போலவே, அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்சுவலியை ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக நினைத்து பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். அமிலம் எதுக்களித்து வருவதால் ஏற்படும் நெஞ்சுவலியை அப்படித்தான் பலரும் நினைத்துக்கொள்வார்கள். உடனே இசிஜி எடுப்பது, எக்கோ எடுப்பது என அடுத்தகட்டத்துக்குப் போவார்கள்.
இவர்களைப் பரிசோதித்துவிட்டு, நெஞ்சுவலிக்கு ஹார்ட் அட்டாக் காரணமில்லை என்பதை இதயநோய் மருத்துவர் உறுதிசெய்த பிறகுதான் அது அமிலச்சுரப்பின் காரணமாக வந்தது என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அவ்வப்போது வலி வரும்போது மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, அப்போதைக்கு தற்காலிக நிவாரணம் பெறுவது என்று இருக்கக்கூடாது. வாழ்க்கை முறையில் மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும்.
சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி, சிகரெட், மதுப்பழக்கங்களைத் தவிர்ப்பது, வெளி உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது என ஆரோக்கியமான லைஃப்ஸ்டைலின் மூலம் இந்தப் பிரச்னையிலிருந்து மீளலாம். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதல்ல என்பதால் கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment