கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் மடல் விருப்பக்ஷப்பா. இவரின் மகன் பெயர் பிரசாந்த் மடல்; பெங்களூரு குடிநீர் வடிகால் துறையில் பணியாற்றிவருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் தன்னுடைய அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கியபோது, போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா வீட்டிலும், பிரசாந்தின் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டில், கட்டுக்கட்டாக, 8.23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏவை A1 குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது.
விஷயம் பூதாகரமானதை தொடர்ந்து, Karnataka Soaps and Detergents Limited (KSDL) நிறுவனத்தின் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ மடல் விருப்பக்ஷப்பா, தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து கடந்த, 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் பெற்று வெளிவந்தார். அப்போது, அவரின் கிராமத்தில் பா.ஜ.கவினர் மடல் விருப்பக்ஷப்பாவுக்கு ராஜ மரியாதை கொடுத்து வரவேற்றது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இப்படியான நிலையில், நேற்றுடன் நிபந்தனை ஜாமீன் முடிந்ததால், மீண்டும் ஜாமீனுக்கு பதிவு செய்த போது, அதை நீதிமன்றம் ரத்து செய்தது.
நேற்று, இரவு, தும்கூரில் இருந்து பெங்களூருவுக்கு மடல் விருப்பக்ஷப்பா காரில் வந்த போது, சந்திரா டோல் கேட் அருகே அவரை தடுத்து நிறுத்திய, லோக் ஆயுக்தா போலீஸார், அவரை கைது செய்தனர். இன்று அல்லது நாளை, நீதிபதி முன்பு எம்.எல்.ஏவை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
லஞ்சப்புகாரில் எம்.எல்.ஏ கைதாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரிய அணுகுண்டு வெடித்ததைப்போல, புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த மாதம், ஊழல் புகாரில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஊழல் புகாரில் சிக்கி வருவது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினருக்கு, வரும் தேர்தலுக்கான வலுவான தீனியாக மாறியுள்ளது.
Comments
Post a Comment