கடந்த ஜனவரி மாத இறுதி வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களை பற்றி நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு மோசடியான வழிகளில் தமது நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்தி உள்ளதாகவும், பெரும்பாலான அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஜனவரி மாதத்தில் இருந்த விலையோடு ஒப்பிட்டால் உண்மையில் 85% குறைவாக உள்ளதாகவும் தரவுகளுடன் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
அதானி குழும பங்கு விலை சரிவு..!
இந்த ஆய்வறிக்கை அதானி குழும நிறுவனங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சில அதானி நிறுவன பங்குகள் 85% வரை அந்த ஆய்வறிக்கைக்கு பிறகு சரிந்தது. குறிப்பாக அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் போன்ற நிறுவனப் பங்குகள் விலை மிக அதிக அளவிலான இறக்கத்தை சந்தித்தது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு வெளியீடு தோல்வியில் முடிவடைந்தது. இது தனிப்பட்ட அதானி நிறுவனத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் மிகப்பெரிய பேசுபொருள் ஆகி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான கருத்துகளை பேசியதற்காக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு காரணமாக அவர் வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி அதானி குழும நிறுவனங்களின் ஊழல் பற்றி பேசியதன் காரணமாக சர்வாதிகாரப் போக்கில் அவருடைய மக்களவை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. என்றாலும் ராகுல் காந்தி தொடர்ந்து மக்கள் மன்றத்தில் அதானி குழும நிறுவன மோசடி பற்றி தொடர்ந்து பேசுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. அந்த அளவிற்கு ஹிண்டர்பர்கின் ஆய்வறிக்கை பல்வேறு அதிர்வலைகளை நமது நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்ற வாரம் ஹிண்டர்பர்க் நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் மோசடி குறித்து நீண்ட ஆய்வறிக்கை வெளியிட இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திக்கு பிறகு பங்கு சந்தைகளில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த வாரங்களில் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கிரெடிட் சூஸ் வங்கி திவால் ஆனதை தொடர்ந்து ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை ஒரு இந்திய வங்கியை பற்றியோ அல்லது ஒட்டுமொத்த வங்கிகளின் நிலை குறித்தோ இருக்கும் என்று வதந்தி பரவியது.
பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி..
இந்த நிலையில் ஹிண்டர்பர்க் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சியின் பிளாக் நிறுவனத்தின் நிதி மோசடி குறித்த நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை இந்திய நிறுவனங்களை பற்றி இல்லாத காரணத்தினால் சந்தையில் நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிளாக் நிறுவனம் 2009 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்ட போது அது ஸ்கொயர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சிறிய மற்றும் கைக்கு அடக்கமான கிரெடிட் கார்டு ரீடரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கு அமெரிக்க வியாபாரிகளிடம் மிகப்பெரிய ஆதரவு இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனம் 2015-ம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்பட்டது. யு பி ஐ பேமெண்ட் வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து இந்த நிறுவனம் இந்தத் துறையில் கால் பதித்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெயரையும் 2021 ஆம் ஆண்டு பிளாக் என்று மாற்றியது. மாதத்திற்கு தற்போது 51 மில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் இந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி வியாபாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு இடையே பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.
இந்த நிறுவனம் போலியாக பலர் இந்த செயலியை உபயோகிப்பதாக கணக்கை உயர்த்தி காட்டியும், நிறுவனத்தின் செலவினங்களை குறைத்து அதிக லாபம் ஈட்டியதாகவும் போலியான கணக்குகளை தயாரித்துள்ளதாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்ததாகவும், இந்த நிறுவனத்தின் போலி கணக்காளர்களில் பலரை தொடர்பு கொண்டு இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு போலியாக நிறுவனத்தின் பங்கு விலையை ஏற்றி ஜாக் டோர்சி ஒரு பில்லியன் டாலர் ( இந்திய பண மதிப்பில் 800 கோடி ரூபாய்) மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை பிளாக் நிறுவனம் முழுவதுமாக மறுத்துள்ளது. அதானி குழும நிறுவனங்களும் தற்போது வரை இந்த ஆய்வறிக்கையை மறுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட பிறகு பிளாக் நிறுவனத்தின் பங்கு விலை வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மிக அதிகபட்சமாக 100 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 38 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்துள்ளது.
Comments
Post a Comment