வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய் போல உயிரைப் பறிக்கும் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதற்கும் உரிய கவனம் கொடுக்கப்பட வேண்டும். வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு நிறைய பேருக்கு உள்ளது. 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
காலில் புண் மாதிரிதானே உள்ளது, யாருக்குத் தெரிய போகிறது என பலர் இந்தப் பிரச்னையை அலட்சியம் செய்கிறார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், வெரிகோஸ் வெயின்ஸ் பற்றிய விளக்கம் மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.
இதில் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் உள்ளது. சாலை பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள், ஒரு நாளில் பெரும்பாலான நேரம் நின்று கொண்டேதான் இருப்பார்கள். அதிகமாக ஒரே இடத்தில் நிற்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10- 15 காவலர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 60-70% பேருக்கு வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிலரின் கால்களில் புண்கள் இருந்தன. ஆனால் அவர்களிடம் கேட்டபோது இது சாதாரண புண்தான்; அதுவாக ஆறிவிடும் என்பது போல கூறினார்கள். மேலும் சிலர், இரவில் அதிகமாக கால்வலி இருப்பதாகவும், ஆனால் அதை எப்படிக் குறைப்பது எனத் தெரியாது என்றெல்லாம் கூறினார்கள். இதன்மூலம், பலருக்கு இப்பிரச்னை இருந்தாலும் அவர்களுக்கு முறையாக அதை எப்படி சரி செய்ய வேண்டும், வராமல் தடுப்பது எப்படி என்பதெல்லாம் தெரியவில்லை. இந்த விழிப்புணர்வு நிகழ்வு மூலம், அவர்களுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறோம்" எனக் கூறினார்.
வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றியும் அவர் விளக்கமாக நம்மிடம் பகிர்ந்தார்... ``வெரிகோஸ் வெயின்ஸ் என்பது காலில் நரம்பு சுற்றிக் கொண்டிருப்பது. காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்படுவதே இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, ஏற்கெனவே குடும்பத்தில் வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பது மற்றும் உடல் பருமன் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தத்தைச் சேர்க்க வேண்டிய நாளங்களின் வால்வுகள் பாதிப்படையும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது. புவி ஈர்ப்பு விசை காரணமாக எல்லா ரத்தமும் பாதத்திலேயே தேங்கத் தொடங்கும்.
வால்வுகள் முறையாக இயங்கும்போது மட்டுமே ரத்தம் சீராக பாதத்திலிருந்து இதயத்துக்குச் செல்லும். அதில் பாதிப்பு வரும் போது ரத்த நாளங்களால் ரத்தத்தை மேலே இதயத்துக்கு அனுப்ப முடியாது. இதன் காரணமாக கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் வீங்கத் தொடங்கும். அதிகநேரம் ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சில திரவங்கள் கருமையாக மாறும்.
இது அந்தப் பகுதியில் உள்ள சருமத்தின் தன்மையையும் கருமையாக மாற்றும். மேலும் அந்தப் பகுதியைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம். சிலர் கால்களில் சூடாக இருப்பது போல் உணருவார்கள். ரத்தம் தேக்கமடைந்து கால்களில் நிற்பதால் இது போன்ற உணர்வு வரலாம். கால்கள் மிகவும் கனமாக இருப்பது போல் தோன்றலாம். இறுதிகட்டமாக அந்த வீக்கங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை புண்களாக மாறும். அந்தப் புண்கள் எளிதில் ஆறாமல் போகலாம்" எனக் கூறினார்.
வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிகள் பற்றியும் அவர் கூறினார்... ``ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு காவலர்கள் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் வரும்போது, நின்று கொண்டே இருக்காமல் அவ்வப்போது சிறுநடை நடக்கலாம். நடப்பதன் மூலம் கால்களுக்கு கிடைக்கும் அழுத்தத்தால், ரத்தம் தேங்கி நிற்காமல் இதயத்துக்குச் செல்ல அது உதவும். சின்னச் சின்ன கால் அசைவுகளும் முக்கியம்.
அடுத்து, Graded compression Stockings எனப்படும் காலுறைகளை அணியலாம். இந்தக் காலுறைகளில், பாதத்துக்கு அருகில் அழுத்தம் அதிகமாக இருக்கும். மேலே செல்லச்செல்ல முட்டிக்கு அருகில் அழுத்தம் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்தக் காலுறைகள், ரத்த நாளங்கள் ரத்தத்தை இதயத்துக்கு அனுப்புவதில் உறுதுணையாக இருக்கும். அவை ரத்த நாளங்களுக்கு அழுத்தம் தந்து சுருக்கி ரத்தத்தை மேலே அனுப்புவதற்கு உதவும்.
வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு இருப்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து ஏதாவது செய்து கொண்டிருக்கும்போது கால்களை கீழே தொங்க விடாமல் சிறிய முக்காலி வைத்து அதன் மேல் கால்களை வைத்துக் கொள்ளலாம். தூங்கும் போதும் கால்களுக்கு தலையணை வைத்து உறங்கலாம். இவையெல்லாம் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்" எனக் கூறினார்.
Comments
Post a Comment