இஸ்ரேலில் நீதித்துறை சீர்திருத்தங்களை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், இஸ்ரேல் போராட்டம் குறித்தும், அந்த நாட்டு பிரதமரின் செயல்பாடுகள் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். பைடனின் இத்தகைய கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. இருப்பினும், ஜோ பைடனின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பதிலடி கொடுத்திருப்பதுதான் `டாக் அஃப் தி டவுன்'.
நீதித்துறையில் சீர்திருத்தம்
- நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவோ, நீக்கவோ செய்யலாம்.
- நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் அரசுப் பிரதிநிதிகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
- அரசு தலைமை வழக்கறிஞரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.
மேற்கண்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால், இஸ்ரேல் அரசு விரும்பும் நபர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறாகச் சில மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது. அதில் அரசு வழக்கறிஞர் அதிகார குறைப்பு நடவடிக்கை அமலுக்கே வந்துவிட்டது. இதற்கு, சாமான்ய மக்கள் முதல் இஸ்ரேலின் மேல்மட்டத் தலைவர்கள் வரை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக இஸ்ரேல் ராணுவ மந்திரியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்த அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் இஸ்ரேல் பிரதமர்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
வலியுறுத்தும் அதிபர் - போராடும் மக்கள்
மக்களுக்கு இதில் ஏற்பில்லை என்பதால் நீதித்துறை சீர்திருத்தங்களைக் கைவிட வலியுறுத்தியிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக். மக்கள் கடந்த ஜனவரி மாதம் முதலே தொடர்ந்து போராடி வருகின்றனர். நாட்டு மக்களைப் பொறுத்தவரை நீதித்துறையின் அதிகாரங்களைக் குறைப்பதோடு, இது ஜனநாயகத்தை நசுக்கிவிடும் எனக் கருதுகிறார்கள்.
தலைநகர் டெல் அவிவ்வில் போராடத் தொடங்கிய மக்கள், தற்போது இஸ்ரேல் முழுக்க தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் நாடாளுமன்ற வாயிலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில், சுமார் 10 லட்சம் பேர் திரண்டனர். `பிரதமர் பதவி விலக வேண்டும், நீதித்துறை சீர்திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும்' என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராடும் மக்களை, காவல்துறையைவைத்து அரசு அடக்க நினைத்தாலும், போராட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் சிலரும் போராட்டத்துக்கு ஆதரவாகக் கிளம்பவே, தற்போதைக்கு நீதித்துறை சட்ட திருத்தங்களை ஒத்திவைப்பதாக தெரிவித்திருக்கிறார் நெதன்யாஹு. ஆனால், முழுமையாகக் கைவிடுவதாக அவர் அறிவிக்கவில்லை.
ஜோ பைடன் கருத்து - பெஞ்சமின் நெதன்யாஹு எதிர்ப்பு
அமெரிக்காவும், இஸ்ரேலும் பல தசாப்தங்களாக நட்பு நாடுகளாக விளங்கிவருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் கொண்டுவரவிருக்கும் நீதித்துறை சட்டத்திருத்தம் குறித்தும் மக்களின் போராட்டம் குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கருத்து கேட்டபோது, ``இஸ்ரேலில் நடப்பவை வருத்தமளிப்பதாக இருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் அவரது முடிவை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் “இது எங்கள் நாட்டு விவகாரம், இஸ்ரேல் ஓர் இறையாண்மை கொண்ட நாடு, அது அதன் மக்களின் விருப்பப்படி முடிவுகளை எடுக்கிறதே தவிர வெளிநாட்டிலிருந்து வரும் அழுத்தங்களின் அடிப்படையில் அல்ல" எனப் பதில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.பூதாகரமாக வெடித்த மக்கள் போராட்டம்; வழியில்லாமல் பணிந்த பிரதமர்! - என்ன நடக்கிறது இஸ்ரேலில்?இஸ்ரேல் போராட்டம்
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்தப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா அமைதியான முறையில் முயன்றதாகவும், அனால் எந்தவித பயனையும் அளிக்கவில்லை என்பதால் ஜோ பைடன் பொதுவெளியில் இப்படி பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரேல் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்க அதிபர் தலையிடுவது இதுவே முதன் முறை. மேலும் ஜோ பைடனின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்மீது, எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன. `பல தசாப்தங்களாக நெருங்கிய நாடுகளாக இருக்கின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும். அதில், பெஞ்சமின் பிளவை ஏற்படுத்தி வருகிறார்' என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.
இஸ்ரேலில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், நாடே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசு ஊழியர்கள், ராணுவ ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் குதித்திருப்பதால் இஸ்ரேல் அதிபரும் இந்தச் சீர்திருத்தங்களைக் கைவிடக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருப்பதால் இந்த விவகாரத்தில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SljHnC
http://dlvr.it/SljHnC
Comments
Post a Comment