‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகளை விரிவாகக் கண்டோம். அதன் தொடச்சியை, இந்த வாரமும் பார்ப்போம்…
பசும்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் அலர்ஜி
பசும்பால் கொடுக்கப்படும் ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 7 சதவிகிதத்தினருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இதனை, பசும்பால் புரத ஒவ்வாமை (Cow Milk Protein Allergy) என்போம். பசும்பால் புரத ஒவ்வாமை ஏறபடும் குழந்தைகளில், வாந்தி, வயிற்றுப்போக்கு, குடல்வலியால் தொடர்ந்து அழுதல் (colic), சரும அரிப்பு, உதடு, முகம் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
பசும்பாலில் காணப்படும் பீட்டா - லேக்டோகுளோபுலின் (Beta- Lactoglobulin) என்னும் புரதம் தான், 76% பசும்பால் ஒவ்வாமை ஏற்படக் காரணமாகும். இந்த பீட்டா-லேக்டோகுளோபுலின் புரதம் தாய்ப்பாலில் காணப்படுவதில்லை. பசும்பால் புரத ஒவ்வாமை காணப்படும் குழந்தைகளில் ஒரு வயதுக்குப் பிறகு 50% பேருக்கும், 5 வயதிற்குள் 80-90% பேருக்கும் அந்த ஒவ்வாமை முற்றிலும் குணமாகிவிடுகிறது. எனவே தான், குழந்தைகளுக்கு ஒரு வயதான பிறகு, பசும்பால் கொடுக்கத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறோம்.
தாய்ப்பாலில் உள்ள ஆல்பா-லேக்டால்புமின்
தாய்ப்பாலில் உள்ள முக்கிய புரதம் ஆல்பா- லேக்டால்புமின் (Alpha- Lactabumin) ஆகும். ஆல்பா- லேக்டால்புமின், தாய்ப்பாலில் லாக்டோஸ் (Lactose) உருவாக முக்கியப் பங்காற்றுகிறது. கால்சியம் மற்றும் துத்தநாகத்துடன் (Zinc) ஆல்பா- லேக்டால்புமின் இணைந்து, முக்கிய மினரல்கள் உறிஞ்சப்படுவதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. ஆல்பா- லேக்டால்புமின், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தாய்ப்பாலின் புரதத்தில் 20- 25% என அதிகம் நிறைந்திருக்கும் ஆல்பா-லேக்டால்புமின், பசும்பாலின் புரதத்தில் 2- 5% என்ற அளவிலேயே காணப்படுகிறது.
பவுடர் பால் (Formula Milk)
இவ்வாறு, தாய்ப்பாலுக்கும் பசும்பாலுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதாலும், பசும்பாலினால் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாலும், தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் பயன்பெறும் வகையில், தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று கண்டுபிடிக்கும் முயற்சி, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
1838-ம் ஆண்டில், ஜெர்மன் விஞ்ஞானி ஜோஹன் ஃப்ரான்ஸ் சைமன் (Johann Franz Simon) முதன்முறையாக தாய்ப்பால் மற்றும் பசும்பாலின் வேதியியல் பகுப்பாய்வை ஆய்வு செய்து வெளியிட்டார். இவர்தான், பசும்பால் தாய்ப்பாலைவிட அதிகளவு புரதம் மிகுந்தது எனவும், பசும்பாலிலுள்ள புரதமே, பசும்பால் செரிமானத்தில் பிரச்னை ஏற்படுத்துகிறதென்றும் கண்டறிந்தார். இவரின் ஆய்வுகளே, பிறகு, பவுடர் பால் உருவாக்கத்திற்கு அடிப்படையாக விளங்கியது.
1865-ம் ஆண்டில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (Justus Von Liebig), பசும்பால், கோதுமை மற்றும் பொட்டாசியம் பைகார்பனேட்டை கொண்டு, முதன்முதலில் வணிக நோக்கத்துடன், பவுடர் பாலை கொண்டு வந்தார். பின்பு, பல்வேறு ஆய்வுகள் மூலம், பவுடர் பால் நீண்ட நாள்கள் கெடாமலிருப்பது நிரூபிக்கப்பட்டது. தாய்ப்பாலைப் போன்ற சத்துகள் நிறைந்திருப்பதற்கு பவுடர் பாலில் சத்துகள் செறிவூட்டப்பட்டு, பல்வேறு மாறுதலுக்குப் பிறகு தற்போதைய நிலையை அடைந்துள்ளது.
மூன்று விதமான ஃபார்முலா மில்க் உள்ளன. அவை...
* பசும்பாலிலிருந்து உருவாக்கப்பட்டது
* சோயா பாலிலிருந்து உருவாக்கப்பட்டது
* ஸ்பெஷல் ஃபார்முலா மில்க்
பசும்பாலில் இருந்து உருவாக்கப்பட்ட ஃபார்முலா மில்க்
உலகம் முழுதும் பெரும்பாலான ஃபார்முலா மில்க் பவுடர் பசும்பாலில் இருந்து உருவாக்கப்படுகிறது. எனினும், பசும்பாலில் தாய்ப்பாலைவிட அதிகளவு கொழுப்பு மற்றும் புரதம் இருப்பதால், கொழுப்பு பிரிக்கப்பட்டு (skimmed), மற்றும் நீர் சேர்க்கப்பட்டு, தாய்ப்பாலுக்கு ஒப்பான கொழுப்பு மற்றும் புரத அளவு எட்டப்படுகிறது. மேலும் தாய்ப்பாலிற்கு நிகரான வைட்டமின் மற்றும் இதர சத்துகளின் அளவை அடைய, கூடுதலாக வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் இரும்புச்சத்து சேர்க்கப்படுகின்றன.
சோயா பாலில் இருந்து ஃபார்முலா மில்க்
சோயா பாலில் இருந்து உருவாக்கப்பட்ட ஃபார்முலா மில்க், கேலக்டோசீமியா (Galactosemia), பிறவி லேக்டேஸ் குறைபாடு (Congenital Lactase deficiency) போன்ற மரபணு நோய்கள் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
ஸ்பெஷல் ஃபார்முலா மில்க்
பசும்பால் புரத ஒவ்வாமை உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு, பசும்பாலில் தயாரிக்கப்பட்ட பவுடர் பாலைக் கொடுக்கும்போது, ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படுமென்பதால், இவர்களுக்கு பிரத்யேகமாக ஸ்பெஷல் ஃபார்முலா மில்க் உருவாக்கப்பட்டுள்ளது.
ஃபார்முலா மில்க், தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபார்முலா மில்க் உபயோகம், வணிகரீதியாக அதிகரித்த காரணத்தால், தாய்ப்பால் கொடுக்கும் அளவு உலக அளவில் வெகுவாக குறைந்தது. Infant Milk Substitutes, Feeding bottles, and Infant Foods (IMS act 1992, amended in 2003)-ன் படி, 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு எவ்வித உணவையும் வணிகரீதியாக விளம்பரப்படுத்தக்கூடாது; ஃபார்முலா மில்க் தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவர், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எவ்வித ஸ்பான்சர்ஷிப்பும் செய்யக்கூடாது.
ஃபார்முலா மில்க், தாய்ப்பாலுக்கு எப்போதும் மாற்றில்லை. தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு போதுமாக இல்லை அல்லது குழந்தைக்கு சில மரபணு நோய் காரணமாக தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தி இருந்தால் மட்டுமே ஃபார்முலா மில்க் தொடங்க வேண்டும்.
இவ்வாறு, மருத்துவர் அறிவுறுத்தலால் ஃபார்முலா மில்க் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கு, பவுடர் பாலை கலக்கும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பவுடர் பாலை பாலாடையில் ஏன் கொடுக்க வேண்டும், புட்டிப்பால் ஏன் கொடுக்கக் கூடாது, தாய்ப்பால் தானம் என்றால் என்ன போன்றவை குறித்து, அடுத்து வரும் அத்தியாயங்களில் விரிவாக அலசுவோம்.
பராமரிப்போம்…
Comments
Post a Comment