FPO பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி; முதலீட்டாளர்களுக்கு ரூ.20000 கோடியை திருப்பிக்கொடுக்கிறது!
அதானி நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்துவருகிறது.
இந்நிலையில் ரூ.20000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ பங்கு விற்பனை மூலம் நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்தியது. அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையிலும், பங்குகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையிலும் கூட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகள் அதானி பங்குகளில் முதலீடு செய்ய முன்வந்தன.
எஃப்.பி.ஓ வெளியீட்டில் 1.12 மடங்கு விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து பங்கு விற்பனை வெற்றிகரமாக முடிந்தது என செய்திகள் வந்த நிலையில் திடீரென்று கவுதம் அதானி பங்கு விற்பனையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதானி கூறியதாவது 'அதானி நிறுவனப் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு எஃப்.பி.ஓ பங்கு விற்பனையைத் திரும்பப் பெற அதானி குழும இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இந்தச் சூழலில் பங்கு விற்பனையைத் தொடர்வது கொள்கை ரீதியாக நியாயமான செயல் அல்ல என்பதால் விற்பனை பரிவர்த்தனையைத் திரும்பப் பெறுகிறோம்.
மேலும் முதலீட்டாளர்கள் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும். அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி' என்று அவர் கூறியுள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என செபி அறிவித்த பிறகு அதானி தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதானி பங்குகள் சரிவைச் சந்தித்ததால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தவர் படிப்படியாக பின்னுக்குத் தள்ளப்பட்டு இப்போது 15ம் இடத்தில் உள்ளார்.
Comments
Post a Comment