Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா?
-asw, விகடன் இணையத்திலிருந்து...
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
இதற்கு பதில் தெரிந்துகொள்ள முதலில் நீங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காலையில் திட உணவு சாப்பிட்டால், ரொம்பவும் ஹெவியாக உணர்வார்கள். பல மணி நேரத்துக்கு மந்தமாக உணர்வார்கள். வேறு சிலரோ காலையில் அப்படிச் சாப்பிட்டால் நாள் முழுவதும் எனர்ஜியோடு இருப்பதாக உணர்வார்கள்.
சிலர் இட்லி, தோசை. சப்பாத்தி என வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். உங்களுக்கு எது ஏற்றுக் கொள்ளும் என்பதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். எனவே திட உணவுதான் சாப்பிட வேண்டும் என அவசியமில்லை. அந்த வகையில் உங்களுக்கு கஞ்சி குடிப்பது ஏற்றுக்கொள்வதாக நினைத்தால் தாராளமாகக் குடிக்கலாம். அது ஹெவியாகவும் தோன்றாது. எளிதில் செரிமானமாவிவிடும். அது பல மணி நேரத்துக்கு உங்களுக்கான ஆற்றலையும் தரும்.
அடுத்து வெயில்காலம் வரப்போகிறது என்பதால் கஞ்சியில் நீங்கள் மோர் சேர்த்துக் குடிக்கலாம். கோதுமை ரவை கஞ்சி ஏற்றுக்கொள்கிறது என்றால் அதைக் குடிக்கலாம். சிறுதானியங்களிலும் கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம்.
ஒருவேளை நீங்கள் சைவ உணவுக்காரராக இருந்து, புரதச்சத்துக் குறைபாடு இருப்பதாக நினைத்தால் பாதாம், வால்நட் போன்றவற்றை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குடிக்கிற கஞ்சியிலேயே இதில் ஒன்றிரண்டு ஸ்பூன் சேர்த்துக் குடிக்கலாம்.
காலை உணவுக்குக் குடிக்கும் கஞ்சியில் பால் சேர்த்துக் குடித்தால் சிலருக்கு வயிற்று உப்புசம் போல வரலாம். எனவே அதைத் தவிர்க்க மோர் சேர்த்துக் குடிக்கலாம். உணவு விஷயத்தில் எப்போதும் அடுத்தவர்கள் செய்வதை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. அந்த உணவுகள் நமக்கு ஏற்றுக்கொள்ளுமா என்பதைப் பொறுத்தே பின்பற்ற வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment