கடந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்தார். இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளைய தினம் பிப்.27 வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அங்கு காங்கிரஸுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான வார் தொடங்கியிருக்கிறது. எனவே என்னதான் நடக்கிறது என சத்திய மூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம்.
இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், ``சட்டமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸைத் தாண்டி செல்வப்பெருந்தகை செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளுநர் விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. குறிப்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய மகன் இறந்த சோகத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருந்ததால், அவர் தேர்தலில் களம் காண்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், தி.மு.க தலைமை விடுவதாக தெரியவில்லை. முதல்வரே நேரடியாக வீட்டுக்குச் சென்று சமாதானம் செய்தார்.
பின்னர் இளங்கோவனும் ஒருவழியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். தற்போது தேர்தலும் நடக்கவிருக்கிறது. இதில் எப்படியும் இளங்கோவன் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இளங்கோவனின் ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவரை கொண்டு வருவதற்கான வேலையில் இறங்கிவிட்டனர். டெல்லிக்கு புகார் கடிதங்களை அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க தலைமையும், காங்கிரஸ் தலைமையும் இதையே விரும்புவதால் தேர்தலில் ஒருவேளை வெற்றிபெற்றால், அவருக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்றனர்.
இது தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். "தலைவர் அழகிரிக்கு, செல்வப்பெருந்தகைக்கும் இடையேயான மோதல் போக்கு நீண்ட நாள்களாகத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சத்திய மூர்த்தி பவனில் சமீபத்தில் தலைவர் பதவியை பிடிப்பதற்காக நடந்த மோதலுக்கு செல்வப்பெருந்தகைதான் காரணம் என்று அழகிரி நம்புகிறார். அந்த நேரத்தில் அழகிரியை மாற்ற வேண்டும் என முன்னாள் தலைவர்கள் புகார் கடிதங்களை கொடுத்தார்கள்.
அதற்கும் செல்வப்பெருந்தகைதான் காரணம். எனவே எப்படியாவது அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என அழகிரி யோசித்து வந்த நிலையில்தான், ஈரோடு தேர்தல் கை கொடுத்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி விரைவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பதவி வாங்கி கொடுத்துவிடுவார். இதையெல்லாம் புரிந்துகொண்ட செல்வப்பெருந்தகை தனக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மட்டுமே தற்போது வகிக்கும் பதவியைவிட்டு தருவேன் என தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக டெல்லிக்கு தூது அனுப்பியிருக்கிறார். எப்படியோ விரைவில் ஒரு முடிவு தெரியும்" என்றனர்.
Comments
Post a Comment