ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி 24 அன்று தொடங்கிய இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதுதான் உலக மக்களின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. ஆனால், போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதே உண்மை. என்ன நடக்கிறது உக்ரைன் - ரஷ்யா போரில்?
உக்ரைன் சென்ற பைடன்!
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், திடீரென உக்ரைனுக்குச் சென்று அதிர்ச்சி கொடுத்தார் பைடன். போலந்து தலைநகர் வார்சாவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து ரயில் மூலம் 10 மணி நேரம் பயணம் மேற்கொண்டு உக்ரைன் தலைநகர் கீவுக்குச் சென்றார். ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி``சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
``ஒரு மாதமாகவே இது தொடர்பான திட்டமிடல் இருந்தாலும், மூன்று நாள்களுக்கு முன்புதான் பைடனின் உக்ரைன் பயணம் உறுதிசெய்யப்பட்டது. இந்தத் தகவல் வெளியே கசிந்துவிடாமல் ரகசியமாக வைத்திருந்தோம். பைடனுடன் சில பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவர்கள் மட்டுமே உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டனர். அவர் உக்ரைனுக்குச் செல்லும் தகவலை, சில மணி நேரங்களுக்கு முன்னரே ரஷ்யாவுக்குத் தெரிவித்தோம்'' என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது.
உக்ரைன் தலைநகர் கீவில், போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜோ பைடன். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் குறித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஜெலன்ஸ்கியுடன் பைடன் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டன. இந்தச் சம்பவம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ``இந்தப் போர் தொடங்கும்போது `உக்ரைன் பலவீனமாக இருக்கிறது; மேற்குலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன' என்றுதான் ரஷ்ய அதிபர் புதின் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் நினைத்தது இன்று பொய்யாகிவிட்டது'' என்று கூறியிருக்கிறார் பைடன்.
உக்கிரமான புதின்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணம் ரஷ்ய அதிபர் புதினைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பைடனின் வருகைக்கு முன்னதாகவே நாட்டு மக்களிடம் பேசிய புதின், ``ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனைப் பகடைக்காயாக மாற்றியிருக்கின்றன மேற்கத்திய நாடுகள். இந்தப் போருக்கு முழுப் பொறுப்பு மேற்கத்திய நாடுகள்தான். அவர்கள்தான் போரைத் தொடங்கினர். நாங்கள் போரை நிறுத்தவே எங்கள் பலத்தைப் பயன்படுத்துகிறோம்'' என்று மொத்தப் பழியையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்மீது தூக்கிப்போட்டிருந்தார். புதின்
இந்த நிலையில், ஜோ பைடனின் உக்ரைன் வருகை ரஷ்யாவைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. இதனால், இந்தப் போர் இன்னும் உக்கிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதின் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். `அமெரிக்காவுடனான New START அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறோம்' என்பதுதான் அந்த அதிரடி முடிவு.
New START ஒப்பந்தம்!
கடந்த 2010-ம் ஆண்டு, அணு ஆயுத இருப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், `நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுத ஒப்பந்தத்தை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலக அளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என நம்பப்பட்டது.
இந்த ஒப்பந்தம், கடந்த 2021, பிப்ரவரி மாதத்தோடு காலாவதியானது. இதைப் புதுப்பிக்க அமெரிக்கா தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா மறுத்துவந்தது. இந்த நிலையில்தான், அந்த ஒப்பந்தத்திலிருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைன் - ரஷ்யா ரஷ்யா - உக்ரைன் போர்... ராணி எலிசபெத் மறைவு... மஸ்க் சம்பவங்கள்... | `ரீவைண்ட்’ உலகம் 2022
இது தொடர்பாகப் பேசிய புதின், ``உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். ஆகையால், நாங்களும் இந்தப் போரைக் கைவிடுவதாக இல்லை. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுகிறது. ரஷ்யாவின் அணு ஆயுத பலத்தை ஐரோப்பிய நாடுகள் பறிக்க நினைக்கின்றன. இனிமேல் அமெரிக்கா அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், ரஷ்யாவும் சோதனை மேற்கொள்ளும்'' என்றிருக்கிறார்.
``அமெரிக்க அதிபரின் உக்ரைன் வருகையும், ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பும், இந்தப் போர் கூடிய விரைவில் முடியாது என்பதையே உணர்த்துகின்றன. ஆனால், இந்தப் போர் விரைவில் முடிந்தால் மட்டுமே உலக நாடுகளுக்கு அது நன்மை பயக்கும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
http://dlvr.it/Sk1Q3G
http://dlvr.it/Sk1Q3G
Comments
Post a Comment