உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை உறுதி செய்தது. அதனால், அதிமுக முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றிருக்கிறது. இந்த நிலையில், சசிகலா `இந்தியா டுடே' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில் பேசிய சசிகலா, ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அவர் உயிரோடு இல்லை என தோன்றவில்லை. எப்போதும் என்னுடன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும், தமிழக மக்களுடன், அ.தி.மு.க தொண்டர்களுடன் இருக்கிறார். எப்போதும் என்னுடன் இருப்பது போல்தான் உணர்கிறேன்.
உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையிலான பூசல்கள் பற்றியது. சிவில் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்திருக்கும் மனுவுக்கும் அவர்களின் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுதான் முக்கியமானது. அதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். செப்டம்பர் 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ் நீடிக்க அனுமதித்திருக்கிறது அவ்வளவுதான்.
அத்துடன் அ.தி.மு.க தற்போது பாதுகாப்பான கரங்களில் இல்லை. ஒரு கட்சிக்கு அதன் தொண்டர்களின் பலம்தான் முக்கியம். நூறு, இருநூறு பேர் கொண்ட குறிப்பிட்ட குழுவால் வழிநடத்த முடியாது. ஏழைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அனுபவிக்காவிட்டாலும், ஜெயலலிதா பொறுப்பேற்ற காலத்திலிருந்து அதனை புரிந்து கொண்டே செயலாற்றி வந்தார். நான் அவருடன் இருந்ததால் நானும் அதை வழியில் சென்றேன்.
இப்போது செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஜெயலலிதாவும் நானும் பேசும்போதெல்லாம் நாங்கள் செய்த விஷயங்களையும், செய்ய வேண்டிய விஷயங்களையும் பற்றி விவாதிப்போம். அவர் விட்டுச் சென்ற விஷயங்களை முடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் கட்சியை ஒருங்கிணைக்க முயல்கிறேன். தமிழக மக்களை காக்க வேண்டும் அது நிச்சயம் நடக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
News Source: (India Today)
Comments
Post a Comment