திருவாரூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசியதால் தி.மு.க.வினர் மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பது குறித்தும், தி.மு.க ஆட்சியையும் விமர்சனம் செய்தும் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.கவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது திருவாரூரிலும் இருக்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கட்சியின் மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் தி.மு.க கட்சி அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானை புகழ்ந்தும் தி.மு.க ஆட்சி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்து பேசினர். இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தி.மு.க ஆட்சி குறித்து விமர்சனம் செய்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் இருதரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்தனர். அப்போது தி.மு.கவினர் நின்ற பகுதியிலிருந்து மேடையை நோக்கி காலி மதுப்பாட்டில் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் உருவானது. நிலமையை சமாளிக்க மேலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். கூட்டம் நடைப்பெற்ற இடத்தில் இருந்த தி.மு.கவினரை போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சாலையில் அமர்ந்த தி.மு.கவினர், ``ஆட்சியை விமர்சனம் செய்து பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து அழைத்து சென்றனர். அத்துடன் பாட்டில் வீசியது தொடர்பாக தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடந்து முடிந்தது. அப்போது கட்சி அலுவலகத்தில் அமர்ந்திருந்த தி.மு.கவினர் வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பிற்கு நின்றனர். இதனால் சித்தமல்லி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பிற்கு ஏராளமான போலீஸர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment