சென்னையின் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்று தொடங்கி ரயில் வண்டியின் விவரங்களைச் சொல்லும் அறிவிப்பு குரல்கள் இனி ஒலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகள் மட்டுமின்றி, விளம்பர ஒலிபரப்புகளையும் நிறுத்துவதாகத் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை முதல் இத்திட்டம் சோதனை முறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலி அறிவிப்புகளுக்குப் பதிலாக, வழிகாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பயணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், விமான நிலையங்களில் இருப்பது போல, பெரிய திரையில் அறிவிப்புகளைக் காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே, வழிகாட்டு மையங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பால், மக்களைச் சமாளிக்க முடியாமல் மேலும் சில வழிகாட்டி மையங்களை அவசர அவசரமாக அதிகாரிகள் உருவாக்கினர். பல ஆண்டுகளாக ஒலிக்கப்பட்டு வந்த இந்த அறிவிப்புகள் நிறுத்தப்பட்டதால், பல பயணிகள் குழப்பத்துக்கு ஆளாக, இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது மாற்றுத்திறனாளிகள்தான் என்கின்றனர்.
DRA India (Disability Rights Alliance), "இந்தத் திட்டத்தை மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் கேட்காமல் முடிவு செய்ததிருக்கின்றனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைப்பிடம் இந்தத் திட்டம் கலந்தாலோசிக்கப்பட்டதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய டிசம்பர் 3 இயக்கத்தின் நிறுவனர், பேராசிரியர் தீபக்நாதன், ”ஏற்கெனவே தகுந்த போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது மேலும் சிரமத்தைத்தான் அளித்துள்ளது. தென் இந்திய ரயில்வே, இதைச் சோதனை முறையில் இயக்கினாலுமே, இதை நிச்சயம் நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பதுதான் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.
அதிகாரிகள் சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி, ஒலிபெருக்கிகள் உண்டாக்கும் இரைச்சலைத் தடுத்து ‘சைலன்ட்-ஜோனாக’ பொது இடங்களை மாற்ற இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், காது கேளாதோருக்குச் சைகை மொழியில் அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் அறிவித்தாலும், பார்வையற்றோருக்கும், வரிசையில் காத்திருந்து வழிகாட்டி மையத்தை அணுகும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இது மிகுந்த சிரமத்தையே உண்டாக்கும்.
நாங்கள் எல்லா இடத்திலும் எல்லோரையும் உள்ளடக்கிய (Inclusive) தொடர்புமுறையை வலியுறுத்தி வருகிறோம். அதாவது விடியோ, ஆடியோ, சைகை மொழி, ப்ரெய்லி உட்பட அனைத்து விதமான தொடர்புமுறையையும் பொது இடங்களில் நிறுவ வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமில்லாமல், வயதானவர்கள், மொழி தெரியாதவர்கள் என எல்லோருக்கும் பயனளிக்கக் கூடிய ஆடியோ அறிவிப்புகளைத் தென் இந்திய ரயில்வே அமைச்சகம் நீக்கியுள்ளது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது” என்றார்.
Comments
Post a Comment