மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இழந்து நிற்கிறார். சுப்ரீம் கோர்ட்டும் இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயை கைவிட்டுவிட்டது. இந்த நிலையில் தான், உத்தவ் தாக்கரேயை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மும்பை வந்து சந்தித்து பேசினார். அவருடன் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகியோரும் வந்திருந்தனர். உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இதில் உத்தவ், ஆதித்ய தாக்கரே ஆகிய இருவரையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பிற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அர்விந்த் கெஜ்ரிவால், ``தாக்கரேயின் கட்சி மற்றும் சின்னம் திருடப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் உத்தவ் தாக்கரே மிகப்பெரிய வெற்றி பெறுவார். மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரேயுடன் இருக்கிறார்கள். தாக்கரேயுடன் நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தோம். நீண்ட நாள்களாக உத்தவ் தாக்கரேயை சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் இந்த உறவை முன்னெடுத்துச்செல்வோம். உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் மகன். உத்தவ் தாக்கரேயிக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
பாஜக கோழைத்தனமாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை மட்டும் பயன்படுத்துகிறது. பாஜக மட்டும்தான் 24 மணி நேரமும் தேர்தலை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விவசாயிகள், நாடு பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எங்களைக்கண்டு பயப்படுகிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
`வரும் சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா?’ என்று கேட்டதற்கு, `தேர்தல் வரும் போது சொல்கிறேன். நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். எங்களது இந்த உறவை முன்னெடுத்துச்செல்வோம்.’ என்றார்.
Comments
Post a Comment