முட்டை விலையை தொடர்ந்து குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு, அகில இந்திய அளவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) மண்டல வாரியாக செயல்பட்டு வருகிறது. கோழிப் பண்ணையாளர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய முட்டைஒருங்கிணைப்புக் குழுவிற்கு (என்இசிசி), நாடு முழுவதும் மொத்தம் 23 இடங்களில் மண்டல அலுவலங்கள் உள்ளன. இவற்றில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரை அடிப்படையில் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் அனுப்பப்படுகின்றன.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் வாரந்தோறும் திங்கள், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் முட்டையின் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும்.
கடந்த மாதம் அதிகபட்சமாக முட்டை விலை ரூ.5.65 க்கு விற்பனையானது. அடுத்த சில வாரங்களில் முட்டை விலை சரியத் தொடங்கி ரூ.1.25 காசுகள் குறைந்தது. இப்போது ஒரு முட்டையின் விலை ரூ.4.40-ஆக விற்பனையாகிறது.
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில்,
``என்இசிசி அறிவிக்கும் முட்டை விலையில் இருந்து 50 காசுகள் குறைவாக வைத்தே, கோழிப்பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதே சமயம், என்இசிசி அறிவித்த விலையை விட, கடைகளில் கூடுதலாக 50 பைசா உயர்த்தி விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கான முட்டை மைனஸ் விலையை நிர்ணயிப்பதற்கு நெஸ்பேக் என்ற கூட்டமைப்பு உள்ளது.
சில சமயங்களில் நெஸ்பேக் அறிவிக்கும் விலையைவிட குறைந்த விலைக்கு முட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.இப்படி முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
மேலும் முட்டைக்கான உற்பத்தி செலவு ரூ.4.25 காசுகளாகிறது. முட்டை விலை குறையும்போதும், வியாபாரிகள் நெருக்கடியாலும், மேலும் 40 காசுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இதனால் வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்த முடிவதில்லை, கோழிகளுக்கான தீவனங்களும் வாங்க முடியாமல் சிறிய பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, முட்டை விலையை தங்கள் இஷ்டத்திற்கு நிர்ணயம் செய்வதுடன், கோழிப் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், 50- க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் என்.இ.சி.சி மண்டல தலைவர் மற்றும் விலை நிர்ணய குழு உறுப்பினர்களை சந்தித்து முறையிட, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு என்இசிசி மண்டல தலைவர் டாக்டர். செல்வராஜ் மற்றும் விலை நிர்ணயக் குழு உறுப்பினர்கள் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை, மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் மட்டும் இருந்தனர். இதனால் அலுவலத்திலே உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நீண்ட நேரம் ஆகியும் வராததால், என்இசிசி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து பண்ணையாளர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இரண்டாவது நாளாகவும் தங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர். தற்போது, என்இசிசி மண்டல அலுவலர்கள் தர்ணா போராட்டடம் செய்யும் கோழிப் பண்ணையாளர்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment