Skip to main content

`பிரச்சனன்னா அம்மாக்கிட்ட சொல்லு; டெல்லியே ஆனாலும் பார்த்துடலாம்' நெகிழ வைத்த போட்டோவும் பின்னணியும்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கால்பந்துத் தொடர் ஒன்று கடந்த வாரம் நேரு மைதானத்தில் நடந்தது. இந்திய பெண்கள் அணியும் நேபாள பெண்கள் அணியும் மோதிய இந்த நட்பு ரீதியிலான தொடரின் இரண்டு போட்டிகளுமே சமனில் முடிந்திருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நேபாளுக்கு எதிராக ஆடிய இந்திய அணியில் மொத்தம் நான்கு தமிழ் வீராங்கனைகளும் ஆடியிருந்தனர். இந்திய அணியின் கேப்டனே இந்துமதி என்கிற தமிழ்ப் பெண்தான். முதல் போட்டியில் இந்துமதியே ஒரு கோலையும் அடித்திருந்தார். இரண்டு போட்டிகளுமே சுவாரஸ்யமாக நடந்து முடிந்திருந்தது. இந்தத் தொடரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்திருந்தது. இந்திய அணியில் ஆடிய இன்னொரு தமிழ்ப் பெண்ணான சந்தியா தனது தாயை இரண்டாவது போட்டியை பார்வையிட அழைத்து வந்திருந்தார்.

போட்டி முடிந்த பிறகு சந்தியா தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலானது. அந்தப் புகைப்படம் குறித்து 'எனக்கான மிகப்பெரிய ஆதரவே என்னுடைய அம்மாதான். ஒற்றை ஆளாக பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் எங்களுக்கான சிறப்பான வாழ்வை உறுதி செய்தார். முதல் முறையாக என்னுடைய ஆட்டத்தைப் பார்க்க அம்மாவை நேரில் அழைத்து வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. என் அம்மாதான் என்னுடைய ஹீரோ' என பதிவிட்டிருந்தார்.

சந்தியாவின் இந்த பதிவும் அம்மாவுடனான அவரின் புகைப்படமும் பலரையும் நெகிழ வைத்தது. இந்த புகைப்படத்தை பற்றி சந்தியாவிடமும் அவருடைய அம்மாவிடமும் பேசினேன். அவர்கள் பகிர்ந்தவை..

'எங்க ஊரு பண்ருட்டி. சின்ன வயசுலருந்தே அக்காவையும் என்னையும் அம்மாதான் ரொம்பவே சிரமப்பட்டு வளர்த்தாங்க. அம்மா விவசாயம்தான் பார்க்குறாங்க. நிலத்துல ஒவ்வொரு தடவையும் என்ன போடுறதுன்னு முடிவு பண்றது தொடங்கி, பால் கறக்குறது ஆடு மாடுகள பார்த்துக்குறதுன்னு எல்லா வேலையையும் அம்மாவேதான் ஒத்த ஆளா செய்வாங்க.

Sandhiya

சின்ன வயசுலயே கவர்மென்ட் ஹாஸ்டல்ல தங்கி படிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்ப ஹாஸ்டல்ல பொழுதுபோக்குக்குன்னு பெருசா எதுவுமே இருக்காது. அந்த ஹாஸ்டல் பில்டிங்க விட்டுமே வெளிய வர முடியாது. ஸ்கூலுக்கு போறப்ப வர்றப்ப பசங்க மைதானத்துல ஃபுட்பால் ஆடுறத பார்த்துட்டே போவேன். அப்பதான் எனக்கும் ஃபுட்பால் மேல ஆர்வம் வந்து ஆட ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல கோச்சா இருந்த மாரியப்பன் சாரும் நிறைய உதவி பண்ணாரு. இப்ப வரைக்குமே அவர்தான் ஒரு வழிகாட்டியா இருக்குறாரு. அப்படியே படிப்படியா ஆடி முன்னேறி இப்ப இந்தியா ஆடுற வரைக்கும் வந்துட்டேன். அம்மாவ இதுக்கு முன்னாடியே க்ரவுண்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கேன்.

ஆனா, அதெல்லாம் சும்மா ப்ராக்டீஸ் பண்ற சமயத்துல மட்டும்தான். முழுசா நான் ஆடுற ஒரு மேட்ச்சுக்கு அம்மாவ இது வரைக்கும் நேர்ல கூட்டிட்டு போனதே இல்ல. இந்த முறை நம்ம ஊர்ல நடக்குறதுனால அம்மாவ கூப்பிட்டே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். விஷயத்தை சொல்லி அம்மாவையும் வர வச்சிட்டேன். அன்னைக்கு மேட்ச்சே ரொம்ப பரபரப்பா போச்சு. முதல் மேட்ச்ச விட ரெண்டாவது மேட்ச்சுக்கு ஆடியன்ஸூம் அதிகமா இருந்ததுனால ரொம்பவே எனர்ஜியா இருந்துச்சு. இப்படி ஒரு சப்போர்ட்ட நான் இதுவரை பெருசா பார்த்ததே இல்ல. மேட்ச்ச முடிச்சிட்டு டீம் மீட்டிங் எல்லாம் அட்டண்ட் பண்ணிட்டு அம்மாவ வந்து பார்க்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. அம்மா மேல கேலரில காத்திருந்தாங்க. அப்பதான் அந்த ஃபோட்டோவ எடுத்தேன். அந்த சமயத்துல ரொம்பவே பெருமையா இருந்துச்சு' என மகிழ்ச்சி விலகாமல் பேசினார் சந்தியா.

Sandhiya & Vasanthi

சந்தியாவிடம் பேசிவிட்டு உடனேயே அவருடைய அம்மாவான வசந்தியிடமும் பேச முயற்சித்தேன். `எதுவும் வேலையா இருக்கீங்களா... கொஞ்சம் பேசணுமே' என்றேன் சந்தியாவிடம். `நமக்கு எப்பப்பா வேலை இல்லாம இருந்துருக்கு. பால் கறந்துக்கிட்டு இருக்கேன்ப்பா... கொஞ்ச நேரம் கழிச்சு நானே போடுறேன்' என்றார். சொன்னது போன்றே அவருடைய வேலைகளுக்கிடையேயும் கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் அழைத்து இயல்பு மாறாமல் அப்படியே பேசினார். 'அந்த போட்டோ இப்படி பரவும்னுலாம் எனக்கு தெரியாது. கடைத்தெருவுக்கு போனப்ப அங்க உள்ள ஆளுங்க இந்த போட்டோவ காமிச்சு டிவிலெல்லாம் போட்டாங்கன்னு சொன்னாங்க. அப்பதான் விஷயம் தெரிஞ்சது.

அன்னைக்கு ஒரே தமாஸா போச்சுப்பா... மைதானத்துல எதோ பூச்சிங்க ஊருற மாதிரி புள்ளைங்க ஓடிட்டே இருக்குதுங்க. அதுல நம்ம சந்தியா எதுன்னு கண்டுபிடிக்கிறதுக்கே எனக்கு ரொம்ப நேரம் ஆயிப்போச்சு. கடைசியில கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் சந்தியாவோட சட்டை நம்பர சொல்லி காண்பிச்சாங்க. அப்பதான் புள்ளைய பார்த்தேன்.

நமக்கு இந்த ஆட்டம் அவ பண்ற சாதனை இதை பத்தியெல்லாம் பெருசா விவரமே தெரியாது. திடீர்னு போன் போட்டு சென்னைக்கு வாம்மான்னு சந்தியா கூப்பிட்டா, புள்ளைய பார்த்தே ரொம்ப நாளாச்சுன்னு நானும் கிளம்பிட்டேன். ஒத்தையில போயி அந்த ஊர்ல தொலைஞ்சு போகப்போறேன்னு என் மூத்த மக சொன்னா. 10-15 வருசத்துக்கு முன்னாடி ஒரு தடவ ஒரு சொந்தக்கார ஆளுக்கு சுகமில்லாம இருந்தப்ப சென்னைக்கு வந்துருக்கேன். அந்த நினைப்புல அப்படிதே ட்ரெயின் ஏறிட்டேன். இங்க இறங்குனா இப்ப சென்னையே வேற மாதிரி இருக்கு. ஏதோ தெரிஞ்ச புள்ளைங்கட்ட சொல்லி சந்தியா என்ன மைதானத்துக்கு கரெக்டா கூப்பிட்டு வர வச்சிட்டா. இதுவரைக்குமே அவ பண்ண சாதனைக எதுவுமே பெருசா எனக்கு விளங்குனது இல்ல. ஆட்டத்துக்கு போயி ஜெயிச்சா எதோ கப்பு வாங்கிட்டு வருவா. அதைக்கூட 'என்னடி எதோ மண்ணெண்ணெய் சிமிலி மாதிரி எதையோ வாங்கிட்டு வந்துருக்கேன்னு' புரியாம கேட்ருக்கேன். ஆனா அன்னைக்கு மைதானத்துல அவளோட அம்மான்னு சொன்னப்போ எனக்கு கிடைச்ச மரியாதை பெருசா இருந்துச்சு. பெரிய பெரிய அதிகாரிங்க உட்காருற இடத்துல என்னையையும் உட்கார வச்சிருந்தாங்க.

உதயநிதி எனக்கு ரெண்டு சீட்டு தள்ளிதான் உட்காந்திருந்தாரு பார்த்துக்கோங்க. எல்லாரும் சந்தியா அம்மாவான்னு கேட்டு கேட்டு கை கொடுத்து வாழ்த்து சொல்லிட்டு போனாங்க. அப்பதான் அவளோட சாதனைங்க என்னன்னு புரிஞ்சது. அவ கைப்பிள்ளையா இருக்கும்போதே அப்பா விட்டுட்டு போயிட்டாரு. ஒத்த ஆளா இருந்துதான் வளர்த்தேன். சின்ன வயசுலயே பெரிய கண்டிஷன் இல்ல. படிக்கிறயா படி. விளையாடுறியா விளையாடு அவ்ளோதான். அவ விருப்பத்துக்கு நான் எப்பவும் தடை சொன்னதே இல்ல. ஆம்பள புள்ள மாதிரி வளர்க்குறீயேன்னு பார்க்குறவங்க சொல்வாங்க. அதெல்லாம் கஷ்டமா இருந்தாலும் அவ விருப்பம் எனக்கு முக்கியம். ஒத்த ஆளா விவசாயம் பார்க்குறேன். ஆம்பளைங்க செய்ற எல்லா வேலையும் செய்வேன். கெத்தா டிவிஎஸ் 50 லதான் போவேன் வருவேன். புள்ளைக்கும் அதையேத்தான் சொல்லி வளர்த்துருக்கேன்.

துணிச்சலா பேசு. எதுவா இருந்தாலும் எதிர்த்து கேளு. எதுவும் பிரச்சனைன்னா அம்மாக்கிட்ட சொல்லு டில்லிலயே இருந்தாலும் நான் பார்த்துக்குவேன்னுதான் சொல்லி வச்சிருக்கேன்' என்கிறார் சந்தியாவின் அம்மா வசந்தா.

`My Mom, My Hero' என்கிற சந்தியாவின் வார்த்தைகளுக்கு வலுவூட்டுதாக இருந்தது வசந்திம்மாவின் இந்த உரையாடல்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...