வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக நமக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியர் பா.நிவேதிதா, விகடன் வாசகர்களுக்காக இத்தொடரை எழுதி வருகிறார்.
கடந்த வாரம், பற்களின் அமைப்பு, அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் முறைகள் குறித்து பார்த்தோம். இந்த வாரம், உடலில் நோய் இருப்பின், அதன் அறிகுறிகளை வாய் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.
வாய் சுகாதாரம் தொடரின் முதலாவது வாரத்தில் கூறியதை, நான் மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வாய் என்பது பற்களோடு சேர்ந்து நாக்கு, உதடு, கன்னத்தின் உள் சதைப்பகுதி, அணணம் மற்றும் ஈறு போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.
அது போலவே நம் உடலில் உள்ள மற்ற உறுப்புகள், அமைப்புகளில் ஏதேனும் நோயோ அல்லது செயலிழக்கும் தன்மையோ ஏற்படும்போது, அது கட்டாயம் வாயில் பிரதிபலிக்கும். அதனால்தான் மிக நுட்பமாக `வாய் நம் உடலின் நிலையைக் காட்டும் கண்ணாடி' என்று கூறுகிறோம்.
என்ன நோய்... எத்தகைய அறிகுறி?
உதாரணத்திற்கு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் பற்களைச் சுற்றி உள்ள ஈறுகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால் கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வாய் சுகாதாரம் (Oral hygiene) நன்றாக இல்லையென்றால் ஈறுகள் பலவீனமடைந்து பற்கள் ஆட்டம் காணும் ஆபத்து உண்டு.
ஆகையால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு அதோடு பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பற்கள் ஆடி, விழுவதைத் தவிர்க்கலாம்.
அதுபோல், வைட்டமின் சத்து மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, ரத்தச்சோகை ( Anemia) உள்ளவர்களுக்கு வாயில் சில பாதிப்புகள் ஏற்படும். அதை வைத்தே அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் என்று ஊகித்துவிடலாம். உதடுகளின் ஓரங்களில் காய்ந்து வெடிப்புகள் போல காட்சியளிக்கும். அதோடு நாக்கின் மேல் பகுதி வழவழப்பாக இருக்கும்.
வைட்டமின் பி12 குறைபாட்டால் நாக்கில் ஒருவித எரிச்சல் தன்மை இருக்கும். வாய் முழுவதுமே நமநமப்பு போல உணர்வு இருக்கும். வைட்டமின் சி குறைபாடு இருப்பவர்களுக்கு ஈறுகளில் ரத்தக்கசிவும் பல் ஆட்டமும் இருக்கும். சத்துக் குறைபாட்டை சரி செய்தாலே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
ரத்தப்புற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கும்
அடுத்ததாக, வயிற்றில் புண் மற்றும் அல்சர் பிரச்னைகள் இருந்தால், கன்னத்தின் உள்சதை பகுதியில் ஓரளவுக்கு பெரியதாகப் பார்க்க முடியும். அது போல ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சில நோயாளிகள் வருடக்கணக்கில் வலிப்பு நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்வர். அதன் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும். மருத்துவரிடம் காண்பித்து வேறு மாத்திரைகளை உட்கொள்ளலாம். அதற்காக வலிப்புநோய் மாத்திரையை நிறுத்திவிடக்கூடாது.
ரத்தப் புற்றுநோய் இருக்கும் நோயாளிகளுக்கு ஈறுகளில் இருந்து அசாதாரணமாக ரத்தப்போக்கு இருக்கும். இப்பகுதி மிகுந்த வீக்கத்தோடு காணப்படும். கர்ப்ப காலத்திலும் வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்தாவிட்டால், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதைக் காணலாம். வீக்கமும் இருக்கும்.
வாயைச் சுத்தமாக வைத்திருந்தால் இந்தப் பிரச்னை வராது. மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பின் நாக்கு, நகக்கண்கள் மற்றும் கண்களின் வெள்ளைப்பகுதி ஆகியவை மஞ்சளாகக் காணப்படும். இதுவும் வாயில் இருக்கும் நோயின் வெளிப்பாடுதான்.
சரும நோய்கள் பாதிக்கும்போது, வாய்ப் பகுதியிலும் பாதிப்பு ஏற்படும். எடுத்துக்காட்டாக Lichen planus என்னும் சரும நோய், சரும பாதிப்பை ஏற்படுத்துவதோடு வாயிலும் அதன் விளைவுகளைக் காட்டும்.
வாயில் எரிச்சல், சிவந்து போதல் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வெளிப்பாடுகள் தெரியலாம். மன அழுத்தத்தினால் பல நோய்கள் வாயில் ஏற்படலாம். இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகக்குறைவாகவே இருக்கிறது.
வாய் சுகாதாரம் மிக முக்கியம்!
நிறைவாக, ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு Candidiasis என்ற பூஞ்சை நோய் பெரும்பாலும் வாயில் நாக்கு மற்றும் அண்ணம் இவ்விரண்டு பகுதிகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். சில நேரங்களில் உடலில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாமல் வாயில் மட்டுமே அந்த நோயின் அறிகுறி தெரியலாம். அந்த நேரத்தில் பல் மருத்துவரின் அறிவுரையின் பேரில் பொது மருத்துவரைச் சந்திப்பது மிக அவசியமானது.
நான் நிறைவாகக் குறிப்பிட விரும்புவது, வாயின் ஆரோக்கியமும் உடலின் நலனும் ஒன்றோடொன்று அறிவியல்பூர்வமாகவே இணைந்தவை. சீரிய இடைவெளியில் பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் பல் நோயிலிருந்து மட்டும் இல்லாமல் உடலின் மற்ற முக்கியமான பிரச்னைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
தொடக்க நிலையிலேயே மற்ற ஆபத்தான நோய்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ள உதவும்.
பலமுறை நீங்கள் கேட்டு அலுத்துப் போயிருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்... `நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று!
Comments
Post a Comment