பொருளாதார நெருக்கடி காரணமாக மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா, ட்விட்டர், கூகுள், ஜூம், டிஸ்னி போன்ற முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது பிரபல வலைதள நிறுவனமான Yahoo நிறுவனமும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 1000 பணியாளர்களை இந்த வாரத் தொடக்கத்தில் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது yahoo நிறுவனத்தின் தற்போதைய பணியாளர்களில் 12 சதவிகிதமாகும். விளம்பர தொழில்நுட்பப் பிரிவை மறுகட்டமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போலோ குளோபல் மேனேஜ்மெண்ட்க்குச் சொந்தமான இந்த நிறுவனம், 2023 ஆண்டு இறுதிக்குள் வணிக விளம்பர தொழில்நுட்ப பிரிவுக்குள் 50 சதவிகிதம் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலுவலர் ஜிம் லான்சோன், "கடந்த சில ஆண்டுகளாக நிறுவனத்தின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கினோம். நல்ல லாபத்தையும் அடைந்துள்ளோம். இருப்பினும் விளம்பரச் சந்தையில் சந்திக்கும் பிரச்னைகளைக் காட்டிலும், நிறுவனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை மறுசீரமைப்பு செய்வதன் காரணமாகவே இந்தப் பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் Yahoo நிறுவனத்தில் தனி விளம்பரப்பிரிவு உருவாக்கப்படும். அதன் மூலம், 'Yahoo Finance', 'Yahoo News' மற்றும் 'Yahoo Sports' உள்ளிட்ட பிரிவுகளில் விளம்பர விற்பனையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். பணியை இழக்கும் ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள மற்ற பணிகளுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment