18 ஆண்டுகால கனவு நிறைவேறியது:
2005-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து இந்திய அணி ரன்னர் அப் ஆகியிருந்தது. அந்த அணியில் நூஸின் அல் காதீரும் ஒருவர். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு அப்போது நிறைவேறாமல் போனது. இப்போது அதே தென்னாப்பிரிக்காவில் இந்திய U19 அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் நூஸின் அல் காதீர்தான். இந்த வெற்றியின் மூலம் தனது 18 ஆண்டுக் கால கனவை நினைவாக்கியுள்ளார் நூஸின்.
ஒலிம்பிக் நாயகன் விலகல்:
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரீட், 2019ல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரின் பயிற்சியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் அணியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார் ரீட்.
சச்சின் முன்னிலையில் பாராட்டு விழா!
U 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணிக்குப் பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் நடக்கும் இவ்விழா அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ தகவல்.
ஓய்வுபெறும் முரளி விஜய்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் இருக்கும் பதிய வாய்ப்புகளையும், அதன் வணிக பக்கத்தையும் ஆராய உள்ளதாகக் கூறியுள்ளார். இவர் இறுதியாக இந்திய அணிக்காக 2018 டிசம்பரில் பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடங்கியது கேலோ:
27 விளையாட்டுப் போட்டிகளைக் கொண்டுள்ள கேலோ இந்தியா யூத் கேம்ஸ் கோலாகலமாகத் துவங்கியது. ஜனவரி 30 -ல் தொடங்கி, பிப்ரவரி 11 வரை, 13 நாட்கள் நடக்கும் இந்த போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோர் துவக்கிவைத்தனர்.
Comments
Post a Comment