சேப்பாக்கத்தில் தூள் கிளப்பிய ஜடேஜா!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், தமிழ்நாடு அணியும் சவுராஷ்டிரா அணியும் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி, தமிழ் நாடு அணியை 133 ரன்களில் சுருட்டியது.
இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விடுமுறை தினம் என்பதால் மைதானத்திலும் அதிகப்படியான ரசிகர்கள் கூடி ஜடேஜாவுக்காக்ந் ஆரவாரம் செய்திருந்தனர்.
கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு!
ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி போட்டியில், ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுக்க, திருமணத்திற்கு சென்ற பட்டு வேட்டி சட்டையுடன் V.V. சுப்ரமணியம் என்ற புகைப்படக்காரர் வந்திருந்தார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பருடைய மகனின் திருமணத்திலிருந்து உப்பல் மைதானத்திற்கு ரஞ்சி போட்டிக்காக வருகிறேன். வித்தியாசமான அனுபவமாக உள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றமளித்த சானியா மிர்சா!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா - சானியா மிர்சா இணை 6-7, 2-6 என்ற செட் கணக்கில், பிரேசிலின் ஸ்டெஃபனி - மாட்டோஸ் இணையிடம் வீழ்ந்தது. இதுவே சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.
போட்டிக்கு பின்னர் பேசிய சானியா மிர்சா, 'என்னுடைய விளையாட்டு கரியர் மெல்போர்னில் தான் தொடங்கியது. எனது கிராண்ட்ஸ்லாம் கரியரை நிறைவு செய்ய, இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை.' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
சவுதி கோப்பையைத் தவறவிட்ட ரொனால்டோ.!
நேற்று சவுதி சூப்பர் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸீர் அணியும் அல் இட்டிஹாட் அணியும் ரியாத் மைதானத்தில் மோதின.
இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அல் இட்டிஹாட் அணி வெற்றி பெற்றது. FIFA உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுக்கல் அணி வெளியறியதை தொடர்ந்து, இந்த சவுதி சூப்பர் கோப்பையிலும் ரொனால்டோவின் அணி சாதிக்காமல் வெளியேறியுள்ளது.
Comments
Post a Comment