இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்று டி20 போட்டிகள் உடைய தொடரின் முதல் போட்டியானது நேற்று (ஜன. 27) ராஞ்சியில் நடைபெற்றது. இதற்கு முந்தைய ஒருநாள் தொடரில், இந்தியா "வாஷ் அவுட்" செய்து தொடரைக் கைப்பற்றிய நிலையில், இந்தத் தொடரில் நியூசிலாந்து பதிலடி தருமா என்ற கேள்வியுடனே போட்டி தொடங்கியது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷன் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிப்பாதி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, குல்தீப், வாஷிங்டன் சுந்தர், மாவி, அர்ஷ்தீப், உம்ரான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்வுச் செய்தது. அதன்படி, ஆலன் - கான்வே இணை களமிறங்கியது. ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, கான்வே கவனமுடன் கணித்து ஆடினார். ஆலன் அதிரடியான பவுண்டரிகளும், சிக்ஸருமாய் பறக்க விட, கான்வே கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்ய, 4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 37/0 என ஸ்கோர் செய்தது. அப்போதுதான், 5வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். ஓவரின் முதல் பந்தையே சிக்ஸராக மாற்றினர் ஆலன். ஆனால், அடுத்த பந்தையும் தூக்கி அடிக்க முயல, சுந்தர் தன் நீளத்தை மாற்றியிருந்தார். நேராக சூர்யகுமாரிடம் பந்து செல்ல கேட்ச் அவுட். 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஆலன்.
அடுத்ததாக வந்த, மார்க் சாப்மேன் ஆரம்பம் முதலே வாஷிங்டன் பந்தில் தடுமாறினார். தான் சந்தித்த 4வது பந்தில் ரன் எதுவும் சேர்க்காமல் டக் அவுட்டானார். பந்துவீசிய வாஷிங்டன் சுந்தரே அபாரமாக கேட்ச் பிடித்து சாப்மேன் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழ, 5 ஒவர் முடிவில் 43/2 என ஸ்கோர் மாறியது. அதன்பிறகு கான்வே - பிலிப்ஸ் இணை நிதானமாக ஆடத்தொடங்கியது. 7 ஓவர் முடிவில் நியூசிலாந்து 54/2 என ஸ்கோர் எடுத்த நிலையில், 8 வது ஒவரை உம்ரான் மாலிக் வீச வந்தார். அதன்பிறகு நிதானத்தை கைவிட்ட கான்வே சிக்ஸரும், பவுண்டரிகளும் என நொறுக்கினார். பிறகு, இந்திய பௌலர்கள் நல்ல முறையில் கட்டுப்படுத்தினர். 10 ஓவர் முடிவில் நியூசிலாந்து 79/2 என ஸ்கோர் செய்தது நியூசிலாந்து. நிதானமாக நியூசிலாந்து ரன்களைக் குவிக்க 13வது ஓவரின் - மூன்றாவது பந்தில் அணியின் ஸ்கோர் 100-யைக் கடந்தது.
ஆனால், அதே ஓவரில் குல்தீப், பிலிப் விக்கெட்டை வீழ்த்தினார், அப்போதுதான் டேரில் மிட்செல் களமிறங்கினார். பிறகு, இந்த இணை சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்தது. 16வது ஓவரில் கான்வேயும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். 16 ஓவர் முடிவில் 123/3 என்ற நிலையில் நியூசிலாந்து இருந்தது. பிறகு, 18வது ஓவரில் அர்ஷ்தீப் - கான்வே விக்கெட்டையும், ப்ரேஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்தினார். மிட்செல் சாண்ட்னரும் வந்த வேகத்தில் வெளியேற, ஒருபுறம் டேரில் மிட்செல் மிரட்டலாக ஆடினார். அடுத்தடுத்த சிக்ஸர் மூலம் தனது அரைசதத்தையும் நிறைவு செய்த மிட்செல், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களை விளாசினார் (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்). 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைக் குவித்து, 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. வாஷிங்டன் சுந்தர், குல்தீப் இந்திய அணியில் சிறப்பாகப் பந்து வீசினர்.
177 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது இந்தியா. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக, சுப்மன் கில் - இஷன் கிஷன் இணை களமிறங்கியது. தொடக்கமே தொங்கலாகத்தான் இருந்தது. முதல் ஓவர் முடிவில் இந்தியா 5/0 என தனது ஸ்கோரைத் தொடங்கியது. ஆனால், அடுத்த ஓவரிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தன் சொந்த மண்ணில் விளையாடும் இஷன் கிஷன், ப்ராஸ்வெல் பந்தில் போல்ட் ஆகி தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய, திரிப்பாதியும் 6 பந்துகளைச் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் "டக்-அவுட்" ஆகி அதிர்ச்சியளித்தார். அடுத்து சூர்யகுமார் களமிறங்க, 4வது ஓவரில் சாண்ட்னரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து 7 ரன்களுக்கு வெளியேறினார் கில். பிறகு சூர்யகுமார் - ஹர்திக் சற்று நிதானமாக விளையாடினர். சாண்ட்னர் மறுபக்கம் நல்ல முறையில் பந்து வீசினார். அவர் வீசிய 6வது ஓவர் மெய்டன் ஓவர். தட்டுத்தடுமாறி 7 ஓவர் முடிவில் இந்தியா 39/3 என ஸ்கோர் செய்தது. பிறகு, ஆட்டத்தில் சற்று வேகத்தைக் கூட்டிய சூர்யகுமார் - ஹர்திக் 10 ஓவர் முடிவில் 74/3 என ஸ்கோர் உயர வழிவகுத்தனர். சாண்ட்னரின் ஓவரைத் தவிர்த்து பிற வீரர்களின் ஓவரை நன்றாக ஆடியது இந்த இணை. பிறகு 12வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை சோதி எடுக்க, அடுத்த ஒவரில் ஹர்திக்கும் அவுட்!
ஓர் நல்ல பார்ட்னர்ஷிப் அமையாது, சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டை விட்டுக் கொண்டே இருந்தது. அடுத்து வந்த வீரர்களிலும் வாஷிங்டன் சுந்தரை தவிர, யாரும் நிலைத்து நிற்கவில்லை.
வந்தவர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். வாஷிங்டன் மட்டும் அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்துக் கொண்டிருந்தார். 20வது ஓவரில் சிக்ஸர் மூலம் தனது அரைசதத்தைப் பூர்த்திச் செய்தார் வாஷிங்டன் சுந்தர். அத்தோடு இந்திய அணியும் 150/8 என ஸ்கோர் செய்தது. இறுதியில், சுந்தரும் தனது விக்கெட்டை இழந்து, 50 ரன்களுடன் வெளியேறினார் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) இறுதிவரை போராடிய வாஷிங்டன் சுந்தருக்கு வாழ்த்துக்கள்!
இன்று அவருடைய நாளாக இருந்தாலும், அணியின் நாளாக இல்லை என்பதே நிதர்சனம். 20 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்தில் சாண்ட்னர் சிறப்பாகப் பந்து வீசினார். ப்ராஸ்வெல், ஃபெர்குசனும் அவருக்குத் துணையாக பக்கபலமாக வீசினர்.
இறுதியாக, நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம் (1-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது நியூசிலாந்து.
ஆட்டநாயகனாக, அதிரடியாக ஆடிய டேரில் மிட்செல் தேர்வு செய்யப்பட்டார்.
Comments
Post a Comment