Doctor Vikatan: எனக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். கர்ப்பமாகி 3 மாதங்கள் முடிந்துவிட்டன. இதுவரை 4 முறை ஸ்கேன் செய்துவிட்டோம். அடுத்து என்டி ஸ்கேன் செய்ய வேண்டும். இத்தனை முறை ஸ்கேன் செய்வது பாதுகாப்பானதா?
-Ramya Boopathi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா
உங்களுக்கு முறைதவறிய மாதவிடாய் சுழற்சி இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால் குழந்தையைப் பிரசவிக்கும் தேதியைத் துல்லியமாகக் கணிப்பது சிரமமாக இருக்கும். அதுவே பீரியட்ஸ் சுழற்சி, முறையாக இருப்பவர்களுக்கு, கடைசியாக பீரியட்ஸ் வந்த தேதியை வைத்து, பிரசவ தேதியைக் கணக்கிட முடியும்.
முறைதவறிய பீரியட்ஸ் சுழற்சி உள்ளவர்களுக்கு ஸ்கேன் மூலம்தான் பிரசவ தேதியைக் கணிக்க முடியும். எனவே உங்கள் விஷயத்தில் முதலில் ஸ்கேன் பார்த்தபோது குழந்தை மிகவும் சிறியதாக இருந்திருக்கலாம். அதன் காரணமாக மேலும் ஒன்றிரண்டு ஸ்கேன் மருத்துவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கலாம். அதற்கு 'டேட்டிங் ஸ்கேன்' என்று பெயர். அதன் மூலம் குழந்தையின் ஆரம்ப வளர்ச்சியைப் பார்த்து, டெலிவரிக்கான தேதியைக் குறிக்க முடியும்.
என்டி ஸ்கேன் என்பது 11 வாரங்களில் எடுக்க வேண்டியது. அதற்கடுத்து 20 வாரங்களில் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்னொரு ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். அதையடுத்து ஒன்றிரண்டு ஸ்கேன் மட்டும் எடுக்கப்படும்.
எனவே இத்தனை முறை ஸ்கேன் எடுப்பதால் பயப்பட ஒன்றுமில்லை. அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் என்பது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment