11 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகிலிருக்கும் மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் கடந்த 21-ம் தேதி இரவு சீன புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இங்கு சீன வம்சாவளியினருக்குச் சொந்தமாக நடன விடுதி ஒன்று இருக்கிறது. இதில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிநவீன துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி, (21-ம் தேதி) சனிக்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் ஆசிய-அமெரிக்க சமூகத்தின் மையமான இந்தப் பகுதியில் வன்முறை நடந்தது, இனரீதியாக தூண்டப்பட்டிருக்கலாம் என்ற கவலையை ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. இதையடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
சந்தேகப்படும் வகையில் நின்ற வேன்
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட காவல் அதிகாரிகள், "மர்ம நபர் பொதுமக்கள்மீது கண் மூடித்தனமாகச் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் சந்தேகப்படும் வகையில் வேன் ஒன்று நின்றது. அந்த வேனை சுற்றி வளைத்து நெருங்கியபோது, அந்த வேனிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.
வேனை திறந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் இறந்துகிடந்தார். அவர் 72 வயதான ஹூ கேன் டிரான் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர்தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
185 துப்பாக்கிச்சூடுகள் பதிவு
இந்தச் சம்பவம்தான், இந்தப் பகுதியில் இதுவரை நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு எனக் கூறப்படுகிறது. கடந்த 1984-ல் சான் டியாகோவிலுள்ள 'மெக்டொனால்டு' உணவகத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது கலிஃபோர்னியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மிகப்பெரிய உயிரிழப்பாகும்.
கடந்த 2015-ம் ஆண்டில், சான் பெர்னார்டினோவில், வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களால் ஈர்க்கப்பட்ட தீவிரவாத தம்பதியால், 14 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பல மணி நேரம் கழித்து அவர்கள் கொல்லப்பட்டனர். 1966-2022-க்கு இடையில் 185 துப்பாக்கிச்சூடுகள் பதிவாகியிருக்கின்றன" என்றனர்.
48 மணி நேரத்துக்குள்
கடந்தாண்டும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், இதே பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் முடிந்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
அமெரிக்காவின் கடலோர வடக்கு கலிஃபோர்னியா நகரமான 'ஹாஃப் மூன் பே'-வில் இருக்கும் காளான் பண்ணையில் கடந்த 23-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலிருக்கும் லாரி போக்குவரத்துச் சேவை நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
காரில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி
இது தொடர்பாக சன்னி ஸாவோ (67) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரின் காரில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஏற்கெனவே சம்பந்தப்பட்ட இடத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி வன்முறைக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் 21 நாள்களில் அமெரிக்காவில் 39 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட வெகுஜன துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `வெகுஜன துப்பாக்கிச்சூடு' என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச்சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த/கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.
100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள்
துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச்சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும். ஸ்விட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது. அமெரிக்காவில் 100 குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் என்ற விகிதம் மற்ற நாடுகளைவிட அதிகமாக இருக்கிறது.
கடந்த பல வருடங்களாக துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிப்ரவரியில் 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' நடத்திய ஓர் ஆய்வில், ஜனவரி 2019 - ஏப்ரல் 2021-க்கு இடையில் 7.5 மில்லியன் அமெரிக்க வயது வந்தோர் புதிய துப்பாக்கி உரிமையாளர்களாக மாறியிருக்கின்றனர். இதையொட்டி, 5 மில்லியன் குழந்தைகள் உட்பட 11 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் துப்பாக்கியால் தாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் புதிய துப்பாக்கி உரிமையாளர்களில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
பொதுமக்களிடம் கருத்து கேட்பு
எனவே இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, 57% அமெரிக்கர்கள் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை விரும்புவதாகவும், 32% பேர் தாங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். 10% பேர் சட்டங்கள் குறைவாகக் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக கடுமையான சட்டங்களை இயற்றுவதில் கட்சிகளுக்கு இடையேயும் முரண்பாடு நிலவுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், "கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை ஆதரிப்பதில் ஜனநாயகக் கட்சியினர் ஏறக்குறைய ஒருமனதாக இருக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 91% கடுமையான துப்பாக்கிச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மறுபுறம் இதை 24% குடியரசுக் கட்சியினரும், 45% சுயேச்சையினரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சில மாநிலங்கள் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்ய அல்லது கண்டிப்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றன. சட்டங்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். ஆனால் கலிஃபோர்னியா, எடுத்துக்காட்டாக, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் தாக்குதல் ஆயுதங்களின் உரிமையை தடைசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பது யார்?
தேசிய துப்பாக்கிச் சங்கம் அமெரிக்காவில் மிகவும் சக்திவாய்ந்த துப்பாக்கி லாபியாக இருக்கிறது. இந்த அமைப்பு துப்பாக்கி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் தாக்குதல் ஆயுதங்களை தடைசெய்வதற்கான சட்டத்தை இயற்றுமாறு அதிபர் பைடன் அமெரிக்க காங்கிரஸை வலியுறுத்தியிருக்கிறார். தடைக்கான அவரின் முறையீடு 28 ஆண்டுகளுக்கு முன்பு 1994-ல் நிறைவேற்றப்பட்டதைப் போன்றது. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிட்டது .
ஜோ பைடன் இது தொடர்பாக தன்னுடைய அறிக்கையில், "அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறைக்கு வலுவான நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் அறிவோம். காங்கிரஸின் இரு அவைகளும் விரைவாகச் செயல்பட வேண்டும். இந்த தாக்குதல் ஆயுதத் தடையை எனக்கு உடனடியாக வழங்க வேண்டும். அமெரிக்க சமூகங்கள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவும் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment