தாராளமயமாக்கப்பட்ட பென்ஷன் விதி (Liberalized Pension) 1964 முதல் 2003 வரை நடைமுறையில் இருந்த நிலையில், ஜனவரி 2004 முதல் பணியில் சேருவோர்க்கு ‘நேஷனல் பென்ஷன் சிஸ்டம்’ எனும் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு.
ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDAI) நிர்வகித்துவரும் இந்த பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை மேற்கு வங்கம், தமிழ்நாடு தவிர அனைத்து இந்திய மாநிலங்களும் என்.பி.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தின. மேற்கு வங்கம் இன்றளவும் பழைய பென்ஷன் (OPS) திட்டத்தில் தொடர்கிறது. தமிழ்நாடு ஏப்ரல் 2003-லேயே சி.பி.எஸ். எனும் பங்களிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
2003-க்குமுன் பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எந்தவித பங்களிப்பும் செலுத்தாமல் மாதம் தோறும் பென்ஷன் பெற்று வருகின்றனர். இவர்களது எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஆனால், 2004-க்குப்பிறகு வேலையில் சேர்ந்த அரசு ஊழியர்கள் தனது ஓய்வுக்கால நிதியத்துக்காக தனது அடிப்படை ஊதியம் + அகவிலைப்படியில் 10% தொகையை மாதம்தோறும் செலுத்துகின்றனர். அரசு தரப்பு பங்களிப்பு 10% மற்றும் 14% என இருவகையாக உள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது.
மீண்டும் பழைய பென்ஷன்
இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசு, மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைக்குக் கொண்டுவந்ததும், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் பழைய பென்ஷனுக்குத் திருபம்பி விட்டன. சமூகப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாங்களும் பழைய பென்ஷனுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளது தற்போது அமைந்துள்ள இமாச்சலப் பிரதேச அரசு.
எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி...
இந்த நிலையில், ஓய்வூதிய நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம், நிதி ஆயோக் உள்ளிட்டவை, ‘மீண்டும் பழைய பென்ஷனை நடைமுறைப்படுத்துவது வருங்காலத்தில் நிதிப்பேரிடரை எற்படுத்திவிடும்’ என எச்சரித்துள்ள நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும், பழைய பென்ஷனுக்குத் திரும்ப முயற்சி செய்யும் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘பழைய பென்ஷன் திட்டத்தை ஏன் மீண்டும் கொண்டுவரப்படக் கூடாது!’ என்பதற்கு கீழ்க்காணும் காரணிகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது ரிசர்வ் வங்கி. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
-
நிதி ஆதாரங்களின் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் சேமிப்பு நாளடைவில் கரைந்து காணாமல் போய்விடும்.
-
பங்களிப்பு இல்லாத (Unfunded) பென்ஷன் செலவு காரணமாக, நடப்புச் செலவுகளை (Current Expentiture) ஒத்திவைக்க நேரிடும். இது எதிர்காலத்தில் பெரும் சுமையாகிவிடும்.
-
இந்திய மாநிலங்களின் 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பிடு (Budget Estimate ) 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் 16% அதிகரித்து உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் பென்ஷனுக்கான கூட்டு வளர்ச்சி (Compounded annual Growth Rate – CAGR) 34% அதிகமாகி உள்ளது. (பாரத அரசு வங்கி ஆய்வறிக்கையின்படி) உலக நாடுகள் பலவற்றிலும் இருந்துவந்த ‘பழைய பென்ஷன்’ திட்டம் 1990-க்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது. காரணம், பழைய பென்ஷன் காரணமாக ஏற்பட்ட கடன் சுமை.
அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ‘புதிய பென்ஷனை ரத்து செய்து பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்’ என்பது கவர்ச்சிகரமான வாக்குறுதியாக உள்ளது. காரணம், தற்போதைய புதிய தலைமுறை ஊழியர்கள் பென்ஷன் பெறுவதற்கு எந்தவித பங்களிப்பையும் செலுத்தாமல் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் பெற முடியும்.
என்.பி.எஸ் பெஸ்ட்...
புதிதாக பணியில் சேருவோருக்கு என்.பி.எஸ். கட்டாயம். இதுதான் சிறந்தது. ஓய்வுக் காலத்தில் போதுமான நிதியத்தைப் பெறுவதற்கு நிலையான வழி இதுதான் என்பது ரிசர்வ் வங்கியின் வாதம். தற்போதைய நிலையில் 59,78,000 மாநில அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தில் உள்ளனர். இன்றைய தேதியில் ரூ.4.27 லட்சம் கோடி அளவிலான மாநில அரசுகளின் நிதியத்தை இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வாகம் செய்து வருகிறது.
பழைய பென்ஷன் - நிதிச்சுமை கணக்கீடு
1996 முதல் பணியில் உள்ளவர்களுக்கு இணையாக பழைய பென்ஷன் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒய்வு பெற்ற ஊழியர் பெற்றிருந்த கடைசி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகை மாதாந்தர பென்ஷனாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், இன்றைக்குப் பணியில் சேர்ந்து 30,000 சம்பளத்துடன் பணியைத் தொடர்பவர், தனது 30 வருடப் பணிக்குப்பிறகு சுமார் 7.5 லட்சம் ரூபாயை தனது கடைசி சம்பளமாக பெறக்கூடும். இதன் 50% தொகையான 3.75 லட்சம் ரூபாய், இவரது மாதாந்தர பென்ஷனாக ஆகிவிடும். மேலும், இந்த பென்ஷனானது 8% கூட்டு வளர்ச்சியில், 20 வருடங்களுக்குப் பிறகு அதாவது, இவரது 80-வது வயதில் 17,47,875 ரூபாய் என்ற மாதாந்தர பென்ஷனாக அதிகரிக்கலாம் என்பது தற்போதைய நிலவரப்படியான (குறைந்தபட்ச) கணக்கீடு.
இதுவே இவர் என்.பி.எஸ். திட்டத்தில் இருக்கும்பட்சத்தில் இவருக்கான அரசுத் தரப்பு (14%) மாதாந்திர பென்ஷன் பங்களிப்பு 4200 ரூபாயில் துவங்கி, 1,05,000 ரூபாயில் நிறைவு பெறக்கூடும். இதனால் அரசுத் தரப்பு செலவு வெகுவாக குறையும்.
அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய பென்ஷன் திட்டமானது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அந்த ஆசையை மாநில அரசுகளால் நிறைவேற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது!
Comments
Post a Comment