டெல்லியில் அமைந்திருக்கும், ராஷ்டிரபதி பவன் என்றழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகையில் வரலாற்றை நினைவுகூரும் விதமாக அங்குள்ள தோட்டங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், பல ஆண்டுகளாக முகல் தோட்டம் என்று அழைக்கப்பட்டுவந்த `முகலாயர் தோட்டம்'.
இந்த நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமான `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' எனப்படும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் முகலாயர் தோட்டம் உட்பட பல்வேறு தோட்டங்களுக்கு `அம்ரித் உத்யன்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஜனாதிபதியின் துணை ஊடகச் செயலாளர் நவிகா குப்தா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் இந்த தருணத்தில், ஜனாதிபதி மாளிகையிலுள்ள தோட்டங்களுக்கு அம்ரித் உத்யன் என ஜனாதிபதி பெயர் சூட்டியிருக்கிறார். மேலும், கடந்த ஆண்டுகளைப்போலவே ஜனாதிபதி மாளிகையிலுள்ள தோட்டங்கள், வரும் 31-ம் தேதிமுதல் மார்ச் 26-ம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்படுகின்றன.
அதோடு அனைத்து திங்கள்கிழமைகள், மார்ச் 8-ல் (ஹோலி பண்டிகை) தோட்டங்கள் திறந்துவைக்கப்படாது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அரசின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
அந்த வரிசையில் திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு தலைவர் டெரிக் ஓபிரையன், ``யாருக்குத் தெரியும், அவர்கள் இப்போது ஈடன் கார்டனின் பெயரை மாற்றி மோடி கார்டன் என்றுகூட அழைக்க விரும்பலாம். ஆனால் இதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றின் விலைமதிப்பற்ற வளங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
அதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ``இந்தப் பெயர் மாற்றம் என்பது நீண்ட காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது" என்று விமர்சித்திருக்கிறார். இருப்பினும் காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment