மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து பல தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றில் மாதந்தோறும் மின்சார கட்டணம் மாறும் என்பதும் ஒன்றாக இருக்கிறது. இந்தத் தகவல் உண்மையா, இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
நாளுக்கு நாள் மின்சார தேவை அதிகரித்துவருவதற்கு ஏற்ப கூடவே மின் ஆற்றல் உற்பத்தி தொடர்பான சவால்களும் அதிகரித்துவருகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் கடன்கள் மலைபோல் இருக்கின்றன. தொடர்ந்து பாரம்பரிய ஆற்றல் ஆதாரங்களை நம்பி இருக்க முடியாது என்பதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு மின்சார சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்தத் திருத்த சட்டம் மின் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு சார்ந்து மாநிலங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்தவகையில் ``ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மாற்றங்கள் வரலாம், தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் என மாற்றப்பட்டு, கட்டணமும் மாதந்தோறும் மாறும் என்ற வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம் இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து கூறும் போது, "மின் கட்டணம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா பற்றியும், அதனால் மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்றும் தகவல்கள் பரவுவதைப் பார்க்க முடிகிறது.
மின்வாரியம் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது கருத்துகள் இருந்தால் என்னிடமோ அல்லது துறை அதிகாரிகளிடமோ கேட்டு விட்டு தகவல்களை வெளியிட்டால் சரியாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும். மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் என்ற கருத்து மிகவும் தவறானது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா வந்த போதே திமுக சார்பில் கடுமையாக எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதையடுத்து புதிய திருத்த சட்ட மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை திமுக ஒருபோதும் ஏற்காது. மாதம் ஒருமுறை மின்கட்டணத்தில் மாற்றம் வரும் என்பது போன்ற தவறான தகவல்களை பரப்பி மக்களைக் குழப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment