அமெரிக்காவில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, கறுப்பின இளைஞர் ஒருவர் ஐந்து போலீஸாரால் சரமாரியாகத் தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து போலீஸாரும் கறுப்பினத்தவர்கள்தான். இது தொடர்பாக வெளியான வெளியான தகவலின்படி, ஜனவரி 7-ம் தேதியன்று அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) எனும் கறுப்பின இளைஞரை மடக்கிப்பிடித்த டடாரியஸ் பீன், டெமட்ரியஸ் காலி, எம்மிட் மார்டின், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜூனியர், ஜஸ்டின் ஸ்மித் ஆகிய ஐந்து போலீஸார், அவரைத் தாக்கத்தொடங்கினர்.
வலி தாங்கமுடியாமால், கதறிய டயர் நிக்கோல்ஸை போலீஸார் இன்னும் சாராமரியாகத் தாக்கினர். இதில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு போலீஸாரால் தாக்குதலுக்குள்ளான டயர் நிக்கோல்ஸ், ஜனவரி 10-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், டயர் நிக்கோல்ஸின் மரணத்துக்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதேசமயம், டயர் நிக்கோல்ஸை போலீஸார் தாக்கும் வீடியோ அவர்கள் அணிந்திருந்த போலீஸ் உடை கேமிராவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் டயர் நிக்கோல்ஸ் `அம்மா' எனக் கதறும் காட்சி பலரையும் பதறவைக்கிறது.
இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஐந்து அதிகாரிகளும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவம் நிகழ்வது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே 2020-ல் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment